அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வை இணைத்து அக்கட்சிக்கு ஐந்து தொகுதிகள் கொடுத்து, கூட்டணியை உறுதி செய்த அ.தி.மு.க. அடுத்து பாமகவையும் கூட்டணிக்குள் கொண்டு வந்து அக்கட்சிக்கு ஏழு இடங்கள் கொடுத்து பா.ம.க வையும் தங்கள் அணியில் இணைத்துக்கொண்டது அ.தி.மு.க. இது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நகர்வாக பேசப்படுகிறது. இந்நிலையில் திமுக அணியும் காங்கிரசை இணைத்ததோடு தொடர்ச்சியாக கம்யூனிஸ்டுகள் ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் என அவர்கள் அணியிலுள்ள தோழமைக் கட்சிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
தேர்தல் கூட்டணி என்றால் வெறுமனமே தொகுதிப் பங்கீடு மட்டுமில்லை. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கு ஆகும் செலவுகளையும் கூட்டணிக்கு தலைமை ஏற்கும் கட்சியே செய்யவேண்டுமென்பது எழுதப்படாத ரகசிய ஒப்பந்தம் என்பது அரசியல் வட்டாரத்தில் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் அ.தி.மு.க அணி மிகவும் தாராளமாக உள்ளது என்றும் அதன் வெளிப்பாடுதான் நாளை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் கொடுக்கும் விருந்தில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இது சம்பந்தமாக கொங்குமண்டல அதிமுக எம்எல்ஏ ஒருவரிடம் நாம் பேசியபோது, இப்போதெல்லாம் தேர்தல் வந்துவிட்டால் கூட்டணிக் கட்சிக்கு தொகுதி கொடுப்பது மட்டுமல்ல, அந்தக் கட்சி அடுத்த சில ஆண்டுகள் கட்சியை நடத்துவதற்கும் தேவையான பொருளாதாரத்தையும் கூட்டணிக்குத் தலைமை ஏற்கும் கட்சி கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது. அதிலும் எங்கள் கட்சி இப்போதைய நிலைமையில் மிகவும் தாராளமயத்தில் தான் உள்ளது. நாளைக்கு டாக்டர் ராமதாஸ் எங்கள் கட்சியின் முதல்வர் துணை முதல்வர் மற்றும் இந்த கூட்டணிக்கு வித்திட்ட அமைச்சர்கள் தங்கமணி ,வேலுமணி ஆகியோருக்கு சிறப்பான விருந்து கொடுக்க உள்ளார். அங்கு போய் விருந்து சாப்பிட்டுவிட்டு வணக்கம் போட்டுவிட்டு மட்டும் எங்கள் கட்சித் தலைமை வந்துவிடாது. சாதாரணமாக நாம் ஒரு விசேஷத்திற்கு சென்றால் என்ன செய்வோம் மொய் வைப்போம்.
நம்மளவில் ஏதோ 500 ரூபாய் வைத்துவிட்டு வருவோம். ஆனால் நாளைக்கு நடப்பதோ சிறப்பான விருந்து, கூட்டணி விருந்து. அடுத்து அ.தி.மு.க ஆட்சி நிலைக்க வேண்டுமென்றால் இடைத்தேர்தலில் பா.ம.க வின் துணையோடு அ.தி.மு.க வெற்றி பெற வேண்டியது அவசியமானது . ஆகவேதான் இந்த விருந்து எங்களைப் பொறுத்தவரை பா.ம.க.வுக்கு சூப்பர் விருந்து என நினைக்கிறோம். ஆக விருந்துக்கு போகும் முதல்வர் மொய் வைத்துவிட்டு வருவார் என்பது உறுதி. நாம் வைக்கும் மொய் 500 ரூபாய் என்றார் அவர்கள் வைக்கும் முறை அதே கணக்கில் பெரிய அளவாகத்தானே இருக்கும். என பளிச்சென நம்மிடம் சிரித்தார் அதிமுக எம்எல்ஏ. கூட்டணி என்றால் தேவையான தொகுதி மட்டுமில்லை கட்சி நடத்த தேவையானதையும் பெறுவதில் தமிழகம் முன்னோடி தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அறுசுவை உணவு 500 பரிமாறுவது சிறப்புத்தான் என பூடகமாக கூறுகிறார்கள் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள்.