இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தொழிற்சாலைகளில் தொழில் தேவைக்கான ஆக்சிஜன் தயாரிப்பை நிறுத்தி மருத்துவத் தேவைக்காக ஆக்சிஜனை அனுப்பிவைக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதனைப் பயன்படுத்திக்கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், எங்களால் தினமும் 500 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்துதர முடியும். அதனால் ஆலையைத் திறக்க அனுமதி வழங்கவேண்டும் என மனு செய்தது. தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அனுமதி தரலாம் என மத்திய அரசு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையில் மாநில அரசே (தமிழக அரசு) ஆக்சிஜன் தயாரிக்கலாம் என நீதிபதிகள் யோசனை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆலை நிர்வாகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ''ஆலையை முழுமையாக திறக்க முயற்சிக்க வில்லை, மாறாக ஆக்சிஜன் பற்றாக் குறையைப் போக்குவதற்காக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய மட்டுமே முயற்சி செய்கிறோம். அதேபோல் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட பிறகே ஆக்சிஜன் தயாரிக்க முடியும்'' எனவும் கூறி இருந்தது.
இந்நிலையில் ''தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறந்து இயக்கி ஆக்சிஜன் தயாரிக்க கூடாது. அப்படி செய்தால் உரிய நிபுணத்துவம் இல்லாதவர்களை கொண்டு தரமில்லாத ஆக்சிஜன் தயாரிக்கப்படும். இதனால் ஆபத்துகள் ஏற்படலாம்'' என வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது. மேலும், ''ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான இயந்திரங்களை உபயோகப்படுத்தும் நிபுணத்துவம் தங்கள் நிறுவன ஊழியர்களிடம் மட்டுமே உள்ளதால் அரசுக்கு அனுமதி அளிக்கக்கூடாது'' என வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா என்பது குறித்து தமிழக அரசு நாளை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளது. நாளை காலை 9.15 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.