தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடுகளை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பில், 'பருவமழை பரவலாகப் பெய்து வரும் நிலையில் டெங்கு பரவ வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும். கடைகளின் வாயில்களில் சானிடைசர் வைக்க வேண்டும். சமூகம் சார்ந்த, அரசியல் சார்ந்த கூட்டங்களைக் கூட்டுவதற்குத் தடை என்பது நீட்டிக்கப்படுகிறது. கடைகளில் பணிபுரிபவர்களும் வாடிக்கையாளர்களும் முகக் கவசம் அணிவதை உறுதிசெய்யவேண்டும்.
18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கண்டிப்பாக இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மழை காலத்தில் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பாதுகாப்பினை கருதி அருகில் இருக்கும் நிவாரண மையங்களுக்குச் செல்ல வேண்டும். நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இடி மற்றும் மின்னல் ஏற்படும் பொழுது முறையான வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மழைக்காலத்தில் தண்ணீர் தொடர்பான தொற்று நோய்கள் பரவும் என்பதால் பொதுமக்கள் காய்ச்சிய நீரை குடிக்கவேண்டும். அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.