Skip to main content

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து-தமிழக அரசு அறிவிப்பு  

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

Tamil Nadu government announces cancellation of cases against those who fought against the Sterlite plant

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

தூத்துக்குடியில் மூன்று ஆண்டுகளுக்கு முன் மே-22-2018-ல் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த போராட்டத்தின் போது தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது தமிழக காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் பொது மற்றும் தனியார் சொத்துகள் மீது சேதம் ஏற்படுத்தியதாக பதியப்பட்ட வழக்குகள் தவிர ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் கைதான நபர்களின் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக தடையில்லாச் சான்று அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மற்றும் மத்திய குற்றப்புலனாய்வுத் துறை வசம் உள்ள வழக்குகள் தவிர ஏனைய அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பாஜகவில் சேர்ந்த தமிழிசை; தேர்தலில் மீண்டும் வாய்ப்பா?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Tamilisai joined BJP; A SEAT again?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் இன்று திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை மீண்டும் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் மீண்டும் அவர் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியை பெற்று பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் தமிழிசைக்கு பாஜகவில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி வாய்ப்பளித்தால் மீண்டும் தூத்துக்குடியில் தமிழிசை நிற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கெனவே திமுகவில் கனிமொழி தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.