நாங்குநேரியில் விளைநிலங்கள் வழியாக உயரழுத்த மின்கம்பிகள் அமைப்பதற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (26/07/2021) நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "நிதிச்சுமையைக் குறைக்க சில தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய கால கட்டத்தில் தமிழக மின்வாரியம் உள்ளது. 41 மின்சக்தி நிறுவனங்களில் தமிழகத்தின் டான்ஜெட்கோ 39 ஆவது இடத்தில் 'சி' கிரேடில் உள்ளது" என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், "இந்த அறிக்கையை தமிழக மின்வாரியத்திற்கு ஒரு எச்சரிக்கை மணியாக நாம் கருத வேண்டும். பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பு இல்லாமல் தொழில்துறை வளர்ச்சி என்பது இருக்காது. தமிழக மின்வாரியம், தொழில்துறையும் இணைந்து செயல்பட்டால்தான் இதற்கு தீர்வு காண முடியும். மனுதாரர் மின்துறையை அணுகி நிவாரணம் பெறலாம்" எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.