Skip to main content

தமிழக மருத்துவ மாணவர் மரணம்; முதல்வர் நிதியுதவி

Published on 04/11/2023 | Edited on 05/11/2023

 

Tamil Nadu doctor student lost his life tamilnadu chief minister Funding

 

நாமக்கல் மாவட்டம் வேல்கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன். கட்டட தொழிலாளியான இவரது மகன் மதன்குமார் (28). எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்த மருத்துவரான மதன்குமார், மேல்படிப்புக்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அந்தக் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று படித்து வந்த மதன்குமார் திடீரென்று மாயமானார். அவருடன் படித்த சக மாணவர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். 

 

இந்த நிலையில், நேற்று முன் தினம் (02-11-23) விடுதியின் பின்புறத்தில் மதன்குமார் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். மதன்குமாரின் உடல் பாதி வரை எரிந்த நிலையில் இருந்ததைக் கண்ட சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த அவர்கள், சடலமாக இருந்த மதன்குமாரை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விடுதியின் மாடியில் வைத்து மதன்குமாரை சில மர்ம நபர்கள் கொலை செய்து தீ வைத்து எரித்துள்ளனர். அதன் பிறகு, பாதி வரை எரிந்த அவரின் உடலை மாடியில் இருந்து கீழே தூக்கிப் போட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் சோதனை செய்த காவல்துறையினர் சில தடயங்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படிப்புக்காகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஜார்க்கண்டில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரழந்த மருத்துவர் மதன்குமாரின் குடும்பத்தாருக்கு பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். மேலும், மதன்குமார் இறந்தது குறித்து உரிய விசாரணையை விரைந்து மேற்கொண்டு அவரது இழப்புக்கு நீதி கிடைக்கும் வகையில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

 

Tamil Nadu doctor student lost his life  tamilnadu chief minister Funding

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மதன்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். மேலும், மதன்குமார் இறந்தது குறித்து உரிய விசாரணையை விரைந்து மேற்கொண்டு, அவரது இறப்பிற்கு நீதி கிடைக்கும் வகையில் துரித நடவடிக்கை மேற்கொன்னவும் நான் கடிதம் மூலம் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்