நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் பிரிவு மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் அதில் நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்று விடுபட்டிருந்த சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் பழங்குடியினர் பட்டியலில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் இனி நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து வரவேற்புகள் உருவாகியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த முடிவை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'நரிக்குறவர் மக்களை #ST பட்டியலில் சேர்க்க வேண்டுமெனக் கழக அரசும், எம்.பி.க்களும் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு இசைந்துள்ளதை வரவேற்கிறேன். விளிம்புநிலையிலுள்ள அம்மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தருவதற்கான நீண்ட போராட்டத்தின் வெற்றி இது!' என தெரிவித்துள்ளார்.
நரிக்குறவர் மக்களை #ST பட்டியலில் சேர்க்க வேண்டுமெனக் கழக அரசும், எம்.பி.க்களும் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு இசைந்துள்ளதை வரவேற்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) September 14, 2022
விளிம்புநிலையிலுள்ள அம்மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தருவதற்கான நீண்ட போராட்டத்தின் வெற்றி இது! pic.twitter.com/qqc8WoprSL