பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவிலான கபடிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் சார்பாக வீரர், வீராங்கனைகளை கலந்துகொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிடையே நடைபெற்ற கபடிப் போட்டியின் போது நடுவர்கள் மற்றும் இரண்டு அணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது நடுவர் திடீரென தமிழக வீராங்கனைகளை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது: வீராங்கனைகள், பயிற்சியாளரின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.
பஞ்சாப் மாநிலம் பதின்டா நகரில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின் போது கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியைச் சேர்ந்த வீராங்கனைகளும், அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்டிருப்பதாகவும், பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக வீராங்கனைகள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
பிகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியுடன் இன்று நடைபெற்ற போட்டியின் போது, பிகார் வீராங்கனைகளின் விதிமீறல்கள் குறித்து புகார் செய்ததால், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. பஞ்சாப் மாநில அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தமிழக வீராங்கனைகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதேபோல், தமிழக பயிற்சியாளர் மீதான வழக்கை திரும்பப் பெறச் செய்வதுடன், பிகார் அணியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தமிழக அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்படவில்லை; சம்பவம் குறித்து விசாரிக்கவே பஞ்சாப் காவல்துறை அழைத்துச் சென்றதாகவும், தமிழக வீராங்கனைகள் டெல்லி அழைத்து செல்லப்பட்டு நாளை பாதுகாப்பாக தமிழகம் அழைத்துவரபடவுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.