திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. சுமார் 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். 1970ம் ஆண்டு 7ம் மாதம் பேரூராட்சி மன்றத்தலைவராக டி.பி.எஸ்.லட்சுமணசெட்டியார் தலைவராக இருந்தபோது 10 கடைகள் கொண்ட மார்க்கெட் திறக்கப்பட்டது. அதன் பின்னர் 1986ஆம் வருடம் திமுகவைச் சேர்ந்த எ.எம்.டி.தவமணி அவர்கள் பேரூராட்சி தலைவராக இருந்தபோது 84 கடைகள் கொண்ட அண்ணா தினசரி மார்க்கெட் திறக்கப்பட்டது.
எல் வடிவ பாதை மற்றும் குறுக்குப் பாதையுடன் அண்ணா தினசரி மார்க்கெட் அமைக்கப்பட்டது. மார்க்கெட் அருகே ஆடு அடிக்கும் தொட்டியும் அமைத்துக் கொடுத்ததால் அண்ணா தினசரி மார்க்கெட் வரும் சின்னாளபட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒரே இடத்தில் தங்களுக்கு வேண்டிய அரிசி, பருப்பு, காய்கறிகள், இறைச்சி, மீன், மண்பானை மற்றும் சமையல் செய்ய பயன்படுத்தும் பாத்திரங்கள் உட்பட அனைத்தையும் வாங்கி வந்தனர். நாளடைவில் நகரம் விரிவடையவே ஆங்காங்கே காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் புற்றீசல் போல் தொடங்கப்பட்டதால் அண்ணா தினசரி மார்க்கெட் வரும் பொதுமக்கள் வரவு குறைந்து வந்தது. 84 கடைகளில் 55 கடைகள் மட்டும் செயல்பட்டு வந்தன.
இந்த கடைகளை பேரூராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததாலும், கடையை வாடகைக்கு எடுத்தவர்கள் அவற்றை சரிவர கவனிக்காததாலும் கட்டிடங்களின் மேற்கூரைகள் விரிசல்விட்டு மழைத்தண்ணீர் கீழே இறங்கத் தொடங்கியது. வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போதே மேற்கூரைகள் விழுந்து வருவதால் வியாபாரிகள் அச்சமடைந்தனர். தற்போது புயல் மற்றும் பருவமழை பெய்து வரும் காலத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கட்டிடங்களை அரசு இடிந்து வருவதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக அண்ணா தினசரி மார்க்கெட்டிற்கு வரும் பாதையை அடைத்துவிட்டது. உள்ளே வியாபாரிகள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் வியாபாரிகள் பேரூராட்சி சாலையை காய்கறி கடையாக மாற்றி சாலையின் இருபுறமும் கடைகள் போட்டு வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதுதவிர காவல்நிலையம், குடிநீர் ஏற்றும் நிலையம், மண்ணெண்ணெய் பங்க் வாசலில் காய்கறி கடை போடுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலையின் ஓரம் இருபுறமும் கடைகள் இருப்பதால் அவ்வழியே பேருந்துகள் செல்லும்போது காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் மீது மோதும் அபாயம் உள்ளது. இதுதவிர சாலையில் வரும் மாடுகள் மற்றும் விலங்குகள் பொதுமக்கள் மீது மோதி விபத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. 84 நாட்களாக மார்க்கெட் கடைகளை அடைத்து வைத்துள்ளனர்.
பழைய கட்டிடங்களையும் இடிக்கவில்லை அண்ணா மார்க்கெட் மேற்குப்புறம் தொலைபேசி நிலையம் காம்பவுண்ட் சுவர் திறந்த வெளியாக உள்ளது அந்த பகுதியில் சுமார் 50 கடைகள் போடலாம். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் கடைகள் போட அனுமதிப்பதில்லை என வியாபாரிகள் புகார் செய்கின்றனர். இதனால் அப்பகுதி மாலை நேரங்களில் டாஸ்மாக் பாராக மாறி வருகிறது. எங்கு பார்த்தாலும் மதுவை ஊற்றி குடித்து விட்டு தூக்கி எரியும் பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளன. பேரூராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமும் தகுந்த நடவடிக்கை எடுத்து அண்ணா தினசரி மார்க்கெட் வியாபாரிகள் பாதுகாப்பான முறையில் வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அண்ணா தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரி ரெங்கசாமி பேசும்போது, “47 வருடங்களாக மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தோம். ஒரே நாளில் எங்களை வெளியேற்றிவிட்டு காய்கறி கடைகள் போடுவதற்கு உரிய இடம் கொடுக்கவில்லை. கேட்டால் மன்றக் கூட்டத்தில் வைத்து அனுமதிக்கிறோம் என்கிறார்கள். பழைய கட்டிடத்தை இடித்துவிட்டால் கூட அந்த காலியிடத்தில் நாங்கள் கடைகளை போடுவோம். அதுவும் செய்யவில்லை பேரூராட்சி செயல் அலுவலரிடம் கேட்டால் முறையான பதில் சொல்வதில்லை. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எங்கள் தொகுதியின் அமைச்சர் ஐ.பெரியசாமி ஐயாவிடம் இதுகுறித்து புகார் செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.