Skip to main content

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 5 சதவீத ஒதுக்கீடு கோரி மனு!- தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

கர்நாடகா மாநிலத்தில் கன்னட மொழியில் பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதைப் போல, தமிழகத்தில் தமிழில் பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, தர்மபுரி மாவட்டம் ஹரூர் பெரியார் நகரை சேர்ந்த என்.முருகேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும், 5 ஆயிரத்து 400 மாணவர்கள் சேர்க்கப்படும் நிலையில், 12- ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி படித்தவர்கள் பெரும்பாலும் 5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே சேர்க்கப்பட்டுள்ளனர்.

tamil medium studies medical college quota chennai high court



கடந்த 2018- ஆம் ஆண்டு, தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்த 106 மாணவர்கள் மட்டுமே, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பிய விண்ணப்பத்தின் மூலம் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது, மாணவர்களை தமிழ் வழி படிப்பில் இருந்து ஆங்கில வழிக் கல்விக்கு மாற்றுவதுடன், தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் படித்தவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 

நீட் நுழைவுத் தேர்வில், தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்கள் மொழிச் சிறுபான்மையினர் என்பதால், தமிழ் வழி படித்த மாணவர்களின் நம்பிக்கையையும், நலனையும் பாதுகாக்க வேண்டும் எனவும்,  இதுதொடர்பாக, நவம்பர் 2, டிசம்பர் 11 தேதிகளில் தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர், தமிழக மருத்துவக் கல்வி இயக்குனர் ஆகியோருக்கு அளித்த கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். 
 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, பிப்ரவரி 20- ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசு சுகாதாரத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, மருத்துவ கல்வி இயக்குனரகம் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தது.

 

 

சார்ந்த செய்திகள்