- திரைப்படத் தயாரிப்பாளர் கஸாலி
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனையொட்டி நேற்று ஓட்டு போடத் தகுதியுள்ள சில தயாரிப்பாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேசியவற்றில் சில விபரங்களை இங்கு பதிவிடுகிறேன்.
“போட்டி போட்டு வெற்றியடைபவர்கள் யாராக இருந்தாலும் சங்கத்தை முன்னேற்ற, ஆர்வத்துடன் படம் தயாரிக்க வருபவர்களுக்கு நல்ல ஆலோசனை சொல்லக் கூடியவர்களாக, சினிமா தயாரிப்பை சிறந்த லாபகரமான தொழிலாக உருவாக்கிக் காட்டுபவர்களாக இருக்க மாட்டார்கள் அல்லது இந்த சிஸ்டம் அப்படி நடத்த விடாது. அதையும் மீறி சாதிப்பார்களா என்பதைக் காலம் நமக்குக் காட்டும்.
போட்டி போடும் 2 அணியைச் சேர்ந்தவர்களும் அனலடிக்கும் இந்த வெயிலிலும் அலைகிறார்கள். சில நேரம் நிஜமாகவே அவர்களைப் பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. சென்னையில் இருக்கும் தயாரிப்பாளர்களை, அதுவும் ஓரளவாவது பெயர் வாங்கிய தயாரிப்பாளர்களை கவனமாகச் சந்திக்கிறார்கள். அவற்றை புகைப்படம் எடுத்துப் பகிர்கிறார்கள். அணியில் முக்கியப் பொறுப்புக்குப் போட்டி போடும் சிலர் நேரிலும் வருவதில்லை, போனிலும் தொடர்பு கொள்வதில்லை. வாக்காளர்களுக்கு வேறு வழியே இல்லை. நமக்கு ஓட்டு போட்டே ஆக வேண்டும் என்ற நினைப்பாகக் கூட இருக்கலாம். வடபழனி குமரன் காலனியிலிருக்கும் என் அலுவலகத்திற்கு முரளி ராமசாமி தலைமையிலான அணி 2 முறை கூட்டமாக வந்திருந்து வாக்குச் சேகரித்தார்கள்.
ஒரு முறை முரளி தலைமையிலும் இன்னொரு முறை திரு. ராதாகிருஷ்ணன் தலைமையிலும்! மன்னன் தலைமையிலான அணி ஒரு முறை கூட்டமாக அலுவலகம் வந்து வாக்கு சேகரித்தார்கள். இரண்டு தரப்பாருமே அன்பாக, பொறுமையாக, பொறுப்பாக நடந்துகொண்டார்கள். கடந்த நிர்வாகத்தில் முரளி, மன்னன் இருவருமே சங்க அலுவலகம் செல்லும்போதெல்லாம் நன்கு உபசரித்து நிறைய கருத்துக்ளைப் பகிர்ந்தவர்கள். முரளி கொஞ்சம் சாஃப்ட். ஆனால் நிறைய செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை அவ்வப்போது தெரிவித்திருக்கிறார்.
மன்னன் வேகமானவர். சிலநேரம் சூழ்நிலை பொறுத்து கோபம் கொள்பவர். துபாயில் சொந்தமாக ஒரு M.E.P. கம்பெனியை பல நூறு தொழிலாளர்களை வைத்து நடத்தியவர். நானும் துபாயில் சொந்தமாக Black Rose LLC என்ற லேண்ட்ஸ்கேப் கம்பெனி நடத்தியவன் என்ற முறையில் அந்த நாட்டில் நிர்வாகம் நடத்துவது எப்படி என்பதை உணர்ந்திருக்கிறேன். அவரது அதிரடி நடவடிக்கைகள் சில நேரம் நல்ல பலனைக் கொடுக்கலாம். பார்ப்போம்.
முக்கியப் பொறுப்புக்குப் போட்டியிடும் சிலர் நேரிலும் வந்ததில்லை, போனிலும் வாக்கு சேகரித்ததில்லை. குறிப்பாக அர்ச்சனா கல்பாத்தி, ஜிகேஎம் தமிழ்குமரன், சந்திர பிரகாஷ் ஜெயின், கதிரேசன் (பட வெளியீடு டென்சன் காரணமாக இருக்கலாம்), ரவீந்தர் சந்திரசேகரன் தங்களுடைய தகுதி காரணமாக இருக்கலாம், கொளுத்தும் வெயிலில் அலைவது சிரமமாக இருக்கலாம், கொடுத்த மற்றும் கொடுக்கப்போகும் பணம், பொருட்கள் மீதான நம்பிக்கையாக இருக்கலாம். எலெக்சனுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. வந்தாலும் வரலாம்.
ஜனநாயகத்தில் போட்டி என்பது ஆரோக்கியமானது. ஆனால், ஃபெப்ஸி, திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், ஓடிடி & சேட்டிலைட் நிர்வாகம் ஆகியவை ராட்சஷத்தனமாக வளர்ந்து நிற்கையில் இந்த சாதாரண சங்கத்திற்கு வந்து என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வியும் கூடவே வருகிறது. இரண்டு தரப்பும் அமர்ந்து பேசி தேர்தலின்றி முடிவுக்கு வந்தால்... அடுத்த தேர்தலில் இதைப் பற்றிப் பேசலாம்! ஒன்று மட்டும் நிச்சயம்: யார் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்தாலும், வருடத்திற்குக் குறைந்தது 50 சிறிய படங்களை விநியோகம் செய்ய உதவி செய்தால் அவர்கள்தான் அடுத்த முறை போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள். பார்ப்போம்..!”