தமி்ழ் மொழியை செம்மொழியாக அறிவித்து 15 வருடம் ஆகின்ற நிலையில், தமிழ்நாட்டில் தமிழ்ப் புலவர்கள், பட்டம் பெற்ற தமிழ் பண்டிதர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியாத நிலையில் தமிழுக்குத் தடை விதித்தித்துள்ளது அரசு.
உன்னத மொழியான தமிழ் மொழியை போதிக்க (பி ஏ ,பி .எட்.,) க்கு இணையான தமிழ்ப்புலவர் (பி லிட்.,) தமிழ்ப் பண்டிதர் கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். இப்படி தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்திட கல்வித்தகுதியாக தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவந்த நிலையில் தற்பொழுது தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-ல் தமிழ்ப்புலவர், தமிழ்ப் பண்டிதர் படிப்புகள் தேர்வு எழுத தகுதி இல்லை என அரசு அறிவித்துள்ளது.
இது தமிழுக்கு கிடைத்த அநீதியாகும். இதனால் தமிழ்நாட்டில் தமிழ் புலவர், தமிழ் பண்டிதர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 விண்ணப்பிக்கத் தகுதி அற்றவர்கள் என்று தனித்தமிழ் படித்த ஆசிரியர்கள் தமிழ்நாட்டிலே புறந்தள்ளப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்ப்பண்டிதர் பயிற்சி பாடத்திட்டம் 4 பல்கலைக்கழகங்களிலும், அரசு கல்லூரிகளிலும் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்துவருகிறது. மேலும், கல்விக் கொள்கையில் அந்தந்த மாநில மொழிகளுக்கு அவரவர் முக்கியத்துவம் வழங்கி கொள்ளலாம் என்று இருக்கின்ற நிலையில் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அவரவர் மாநில மொழி பண்டிதர்களுக்கு அம்மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படுகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் தனித்தமிழ் படித்த தமிழ்ப் புலவர், தமிழ்ப் பண்டிதர்கள் 40,000 பேர்கள் தேர்வு எழுத வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வருகின்ற 8.06.2019 மற்றும் 9 .6. 2019 ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு இவர்களும் விண்ணப்பித்துள்ள நிலையில் தேர்வு எழுதமுடியாத சூழ்நிலையைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் தமிழுக்கு தடையா!
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே. இளமாறன் கூறுகையில், காலங்காலமாக உலகமே போற்றி வணங்குகின்ற உன்னத மொழியான தமிழ் பேசவும், எழுதவும் மட்டும் பயன்படும் மொழிமட்டுமல்ல. உணர்ச்சி, பண்பாடு, கலை, இலக்கியம், வீரம், விவேகத்தை உணர்த்தும் மொழி. குழந்தைக்கு தாய் எப்படியோ அதுபோல் தமிழர்களுக்கும் தமிழ் அப்படியே தாய்மையுணர்வை ஊட்டும் மொழி. அப்படிப்பட்ட தமிழ் இன்று தமிழ்நாட்டில் நிராகரிக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
ஆரம்பகாலங்களில் தமிழ் ஆசிரியர்களாக புலவர்களே இருந்து வந்துள்ளனர். தற்போது இந்த நடவடிக்கையால் தமிழ்நாட்டிலே தமிழுக்கு தடை என்பது உறுதியை செய்யும் விதமாக உள்ளது என்றார்.