திமுக இளைஞர் அணி மாநில செயலாளராக பதவியேற்றபின் இளைஞர் அணிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கி வைத்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின், அந்த வகையில் இன்று ஈரோடு மாவட்டம் வந்த அவர் காலை தந்தை பெரியார் பிறந்த இடமான பெரியார் அண்ணா நினைவு இல்லத்திற்கு நேரில் சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பெரியார் பிறந்த இடத்தையும், பேரறிஞர் அண்ணா வசித்த இடத்தையும் அந்த நினைவு இல்லத்தையும் சுற்றிப் பார்த்தார்.
அப்போது கட்சியினருடன் பேசிய உதயநிதி ஸ்டாலின், இது என் வாழ்நாளில் மறக்க முடியாதது எனது தாத்தாவும் கழகத்தின் தலைவராகவும் இருந்த கலைஞர் இங்குதான் தனது பகுத்தறிவு போராட்டத்தை தொடங்கினார். எனது தாத்தாவின் குருகுலம் இந்த பெரியார் மண். இங்கு வந்ததும், தந்தை பெரியாரின் பிறந்த வசித்த அவர் வாழ்ந்த இல்லத்தை நான் பார்த்தது எனக்கு கிடைத்த பெரும்பேறாக கருதுகிறேன் என நெகிழ்ச்சியுடன் பேசிய உதயநிதி ஸ்டாலின், பிறகு திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததோடு தொடர்ந்து திமுக இளைஞரணி சார்பில் குலவிளக்கு என்ற கிராமத்தில் குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
அதேபோல் சிவகிரி அருகே உள்ள கவுண்டம்பாளையம் கிராமத்தில் திமுகவினர் தூர்வாரிய குளத்தை பார்வையிட்டு அதை பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பதாக கூறினார். இதனைத்தொடர்ந்து நாளை திமுக தலைவரும், உதயநிதி ஸ்டாலினின் தந்தையுமான முக.ஸ்டாலின் ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் திறந்து வைக்கும் கலைஞர் சிலையை உதயநிதி பார்வையிட்டார்.
ஈரோட்டில் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் திமுகவினருக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.