கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 17- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் வெளிமாநிலத் தொழிலாளர்களைப் பாதுகாப்பாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது. இதனிடையே நேற்று தெலங்கானாவில் இருந்து 1,200 பேர் வெளிமாநிலத் தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் ஜார்கண்ட் மாநிலம் ஹாட்டியாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த நிலையில் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி சென்னை, வேளச்சேரி, முகப்பேர், பல்லாவரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் 100- க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்மந்தப்பட்ட பகுதிக்கு விரைந்த காவல்துறையினர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.