சென்னை கொண்டித் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சேஷா ராம் (25). நகை வணிகரான இவர், முன்பதிவு முறையில் புதிய ரக நகைகளை மொத்தமாகத் தயாரித்து, தமிழகம் முழுவதும் உள்ள நகைக் கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், திருவள்ளூரில் உள்ள நகைக் கடைகளுக்கு சென்று நகைகளை விற்பனை செய்து அதில் கிடைத்த வருமானமான ரூ. 5 லட்சம் மற்றும் வேறு இடத்தில் கொடுக்க வேண்டிய ஒரு கிலோ எடையுள்ள தங்க நகைகளை தனது வாகனத்தில் வைத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மூன்று இரு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், தொழுவூர் என்னுமிடத்தில் சேஷா ராமை வழிமறித்து, அவரின் இடுப்பிலும், கைகளிலும் கத்தியால் வெட்டி அவரது இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்ப முயன்றது.
அப்போது சாதுரியமாக அவர் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்து மறைத்துக் கொண்டார். இதனால் அவரது இரு சக்கர வாகனத்தை இயக்க முடியாமல், அந்தக் கும்பலின் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் டோக் செய்து, எடுத்துச் சென்றனர். இது குறித்து சேஷா ராம், காவல்துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, சேஷா ராமின் வாகனத்தை திருடிய ஒதிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆதித்யா (19), சரவணன் (21) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய இவர்களது கூட்டாளிகள் ஆன முகேஷ் (24), நாகராஜ் (23), விஜய் (24) உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் இருந்து ஒரு கிலோ எடையுள்ள தங்க நகைகள், ரூ. 5 லட்சம் மற்றும் சேஷா ராமின் இருசக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த சேஷா ராம் தற்போது மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.