கடந்த 12 ஆம் தேதி திருவண்ணாமலையில் நான்கு ஏடிஎம்களில் 70 லட்சத்திற்கும் மேலான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு முக்கிய குற்றவாளிகள் இருவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஐஜி கண்ணன், ''வழக்கில் ஒரு லீட் கிடைத்துள்ளது எனச் சொல்லி இருந்தேன். அப்படி கிடைத்த அறிவியல்பூர்வமான ஆதாரத்தை வைத்து நம்முடைய டீம் மூன்று இடத்தில் ஆபரேட் செய்து கொண்டிருக்கிறோம். ஒன்று கர்நாடகா கோலாரில் கேஜிஎஃப் இடத்தில், இன்னொன்று குஜராத்தில் ஒரு டீம் உள்ளார்கள். விசாரணை இன்னும் முடியவில்லை. திருட்டில் ஈடுபட்டவர்கள் ஹரியானாவிலிருந்து வந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஈடுபட்ட சில பேருடைய மறுக்க முடியாத ஆதாரங்கள் கிடைத்துள்ளது. விசாரணை விரைவில் ஒரு முடிவுக்கு வந்துவிடும்'' எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் தலைவன் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கும்பல் தலைவன் ஆரிப், ஆசாத் ஆகியோரை ஹரியானாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரியானாவிலிருந்து கொள்ளையர்களை விமானத்தில் தனிப்படை போலீசார் அழைத்து வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களின் படங்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.