தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எம்.எல்.ஏ., எம்.பி. அல்லது கவுன்சிலர்கள் மீண்டும் மக்களை சந்திக்கவே வர மாட்டார்கள் அல்லது பெயரளவுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பி விடுவார்கள் என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் உள்ள நிலையில், சேலத்தில் தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் வீடு வீடாகச்சென்று ஸ்வீட், மிக்சர் கொடுத்து நன்றி தெரிவித்து வருவது வெகுவாக கவனம் ஈர்த்துள்ளது.
சேலம் மாநகர தி.மு.க. செயலாளராக இருப்பவர் ஜெயக்குமார் (வயது 50). செவ்வாய்பேட்டையில் வசிக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக கவுன்சிலர் சீட் வாய்ப்பு பெற்ற இவர், சேலம் மாநகராட்சி 28- வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவுகள் பிப். 22- ஆம் தேதி வெளியாகின. அதற்கு அடுத்த நாளே, தனது வெற்றிக்குக் காரணமான வார்டில் உள்ள வி.ஐ.பி.க்கள், சமுதாயத் தலைவர்கள், சிறுபான்மையின பிரமுகர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து, கடந்த இரண்டு நாள்களாக மேளதாளத்துடன் வீடு வீடாகச் சென்று தனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களையும் நேரில் சந்தித்து ஸ்வீட், மிக்சர் கொடுத்து நன்றி தெரிவித்து வருவது, வார்டு மக்களிடையே வெகுவாக கவனம் பெற்றுள்ளது.
கவுன்சிலர் வெற்றிச் சான்றிதழுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் தனது செல்போன் எண்ணுடன் கூடிய நன்றி அறிவிப்பு அட்டையும் அச்சிட்டு விநியோகம் செய்து வருகிறார்.