நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் இளம்பெண் ஸ்வாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் கடந்த 2016-ல் நடந்தது. அந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்தது. அதேசமயம், இந்த சம்பவத்தை சூமோட்டோவாக எடுத்து வழக்குப் பதிவு செய்தது மாநில மனித உரிமைகள் ஆணையம்.
இந்த வழக்கு கிடப்பில் கிடந்த நிலையில், இன்று அந்த வழக்கு தொடர்பாக உத்தரவுபிறப்பித்துள்ளது ஆணையம். அதன்படி, புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன், துணை ஜெயிலர் உதயகுமார், உதவி ஜெயிலர் பிச்சாண்டி, தலைமை வார்டன் சங்கர்ராஜ், முதல் நிலை வார்டன்கள் ராம்ராஜ், பேச்சிமுத்து ஆகியோர் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாநில மனித உரிமை ஆணையத்தின் பொறுப்பு தலைவர் துரை ஜெயச்சந்திரன் முன்பாக ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.