பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜரானார். இதன் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்தை சமூகவலைதளத்தில் பதிவு செய்த பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர், பின்னர் அது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதும் அதனை நிக்கிவிட்டார். இந்நிலையில் அவரது கருத்துகள் பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பத்திரிகையாளர் சங்கங்கள் எஸ்.வி.சேகர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தன. இதனால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என அஞ்சிய அவர் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார்.
ஆனால் இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. இதைத்தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் உச்சநீதிமன்றமும் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. மேலும் அவரை கைது செய்ய எவ்வீத தடையும் இல்லை என்றும் கூறியது.
இந்நிலையில், எஸ்.வி.சேகர் மீதான அவதூறு வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று காலை 10 மணி அளவில் அவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.