
தமிழ்நாட்டில் சமீப காலமாக ஏதாவது பிரச்சனையில் சிக்கும் அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் சுற்றுச்சூழல் துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
அதே போல புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கியில் நகை கடனில் ரூ.1.8 கோடி மதிப்பில் முறைகேடு நடந்திருப்பது தணிக்கையில் தெரிய வந்த நிலையில் கடந்த 10ந் தேதி மேற்பார்வையாளர் சக்திவேல் (56), நகை மதிப்பீட்டாளர் கனகவேல் (51), செயலாளர் நீலகண்டன் (58) ஆகியோரை மண்டல இணைப் பதிவாளர் உமாமகேஸ்வரி 3 பேரையும் பணியிடைநீக்கம் செய்தார்.
இந்த நிலையில் செயலாளர் நீலகண்டன் இன்று அதிகாலை அவரது வீட்டில் உள்ள குளியலறையில் கயிற்றால் தூக்கிலிட்டு பிணமாக தொங்கியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து அங்குவந்த காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அவ்விசாரணையின் முடிவிலேயே அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா எனத் தெரியவரும் என்றனர்.