நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூரின் மெயின் பஜாரில் அலி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை வைத்திருகு்கும் மைதீன்பிச்சை கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி அன்று இரவு தன் நகைக்கடையைப் பூட்டிவிட்டு நகைப்பையுடன் வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது, வேவு பார்த்து பின்தொடர்ந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிவிட்டு 5 கிலோ தங்க நகை மற்றும் 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
மாவட்டத்தில் நடந்த இந்த அதிகபட்ச கொள்ளைச் சம்பவத்தை நக்கீரன் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். சம்பவம் நிகழ்ந்த இடத்தை காவல்துறை உயரதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடிப்பதற்காக மாவட்ட காவல்துறை எஸ்.பி.யான சரவணன், 6 தனிப்படைகளை ஏ.எஸ்.பி. மாரிராஜன் தலைமையில் அமைத்தார்.
தனிப்படையினர், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் நம்பர் பிளேட் இல்லாத கருப்பு நிற பைக்கில் வந்த மூன்று நபர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இருப்பினும், கொள்ளை சம்பவம் நடந்த இடத்தின் செல்போன் டவர் சிக்னல்களையும் ஆராய்ந்தனர். அதில் ஒரு நம்பரிலிருந்து தொடர்ந்து பேசியதும், சம்பவத்திற்குப் பிறகு அந்த நம்பர் சுவிட்ச் ஆஃப் ஆகி பின் இரவு 09.00 மணிக்கு மேல் ஆன் செய்யப்பட்டது தெரியவர, சந்தேகத்திற்குரிய அந்த நம்பர் செல்லுக்குரியவர் பாறையடி காலனியின் சுதாகர் என்பதை விசாரணையில் உறுதிசெய்தனர். இதையடுத்து, அந்த நபரைப் பிடித்து தங்கள் பாணியில் விசாரித்த காவல்துறையினரிடம், அவரும், அவரது கூட்டாளிகளும் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவரது வாக்குமூலம்படி தொடர்ந்து விசாரணை நடத்திய தனிப்படையினர், அதே காலனியைச் சேர்ந்த அழகு சுந்தரம் என்பவர் மூளையாகச் செயல்பட்டு கொள்ளையை நடத்தியது தெரியவந்தது. சுதாகர் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்த தனிப்படையினர், அவர்களிடமிருந்து 2.75 கிலோ நகைகளை கைப்பற்றினர்.
கொள்ளை நடத்திய இவர்கள் அங்கிருந்து காருகுறிச்சி வழியாக, திருப்புடை மருதூர் வந்து நகைகளைப் பங்கு போட்டுள்ளனர். தலைமறைவான அழகு சுந்தரத்தை தேடி வருகிறோம் என்கின்றனர் காவல்துறையினர்.
"கொள்ளையில் தொடர்புடையவர்கள் அந்த ஏரியாவைச் சேர்ந்தவர்கள் தான். தலைமறைவான அழகு சுந்தரத்திடம் மீதமுள்ள நகைகள் இருப்பதாகப் பிடிபடடவர்கள் தெரிவித்துள்ளனர். அவரை விரைவில் பிடித்துவிடுவோம்" என்றார் மாவட்ட எஸ்.பி.யான சரவணன்.
பிடிபட்ட கொள்ளையர்களில் சுதாகர் என்பவர் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு மாணவனாம். சம்பவம் நடந்து ஓவர் நைட்டில் கொள்ளைர்கள் பிடிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.