![Surprisingly, the mother-in-law](http://image.nakkheeran.in/cdn/farfuture/sIMlnptrt-V2bqSyCfUf2bGMqhZSN3MDt_eY9SYiazo/1611840427/sites/default/files/2021-01/th-6_3.jpg)
![Surprisingly, the mother-in-law](http://image.nakkheeran.in/cdn/farfuture/J8ya575c8AWYxpyFRufCt9BefpeH1KD0hVu5-t30Mhg/1611840427/sites/default/files/2021-01/th-5_8.jpg)
![Surprisingly, the mother-in-law](http://image.nakkheeran.in/cdn/farfuture/3cisTZdX9Zk43j4CyKD7GomiKxPvT62tL9sCc-bLOjs/1611840427/sites/default/files/2021-01/th-4_10.jpg)
![Surprisingly, the mother-in-law](http://image.nakkheeran.in/cdn/farfuture/KIBiMrsT3hsN7k11W4ZE6zpiCq15mQhksRcy_xZllEE/1611840427/sites/default/files/2021-01/th-3_16.jpg)
![Surprisingly, the mother-in-law](http://image.nakkheeran.in/cdn/farfuture/pl7p9xKLzuWD6cFLqQg67Ywbi8uQz2G3e2RIXBUZPCE/1611840427/sites/default/files/2021-01/th-2_19.jpg)
![Surprisingly, the mother-in-law](http://image.nakkheeran.in/cdn/farfuture/QVGjN2U9ntJz2ccG60Xdu73ldmwjfYiIECwwzrDijMA/1611840427/sites/default/files/2021-01/th-1_23.jpg)
![Surprisingly, the mother-in-law](http://image.nakkheeran.in/cdn/farfuture/yn9V38dvuSJCU-nZxVl1Zu5w2KF-rCzqbFdBaqDfabM/1611840427/sites/default/files/2021-01/th_22.jpg)
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது கள்ளிப்பட்டி. இங்கு வசிக்கும் தனது தங்கை மகளுக்குப் பாரம்பரிய முறைப்படி, 15க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில், உற்றார் உறவினர்கள் புடைசூழ, பாரம்பரிய முறையில் சீர் கொண்டுசென்ற தாய் மாமனின் சடங்கு நிகழ்வு அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், காங்கேயம் காளைகள், வெள்ளாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை காட்சிப்படுத்தியும் அதேபோல் முந்தைய முறைப்படி சமையல் பாத்திரங்களில் சமைத்து உணவுகளைப் பரிமாறியும் அவரது சொந்தங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் அந்தத் தாய்மாமன்.
கோபிசெட்டிபாளையத்தில் தனியார் மருத்துவமனை நடத்திவருபவர் ராஜா. இவரது மனைவி தாராதேவியும் மருத்துவர் என்பதால் இருவரும் மருத்துவமனையை நிர்வகித்து வருகின்றனர். மருத்துவர் ராஜாவின் தங்கையான மோகனப் பிரியாவிற்குத் திருமணமாகி ரிதன்யா, மித்ராஸ்ரீ என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன. அந்த இரு பெண்களும் பெரியவர்களாகி விட்டதால், இருவருக்கும் பூப்பு நன்னீராட்டுச் சடங்கு செய்யும் நிகழ்வு மோகனப் பிரியா – முத்துக்குமார் தம்பதிகளின் விவசாயத் தோட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.
இவ்விழாவிற்கு தாய் மாமன் சீதனம் அளிக்கும் வழக்கப்படி, தாய் மாமனான ராஜா, 100க்கும் மேற்பட்ட தட்டுகளில் சீர் வகைகளை தாங்களே தயாரித்து 15க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் உற்றார் உறவினர்கள் புடைசூழ கோபிசெட்டிபாளைத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கள்ளிப்பட்டியில் உள்ள தனது தங்கை வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அவருக்குப் பின்னால், மாட்டு வண்டி, குதிரை வண்டி மற்றும் 100க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்துச் சென்றது காண்போரை புருவமுயர்த்த வைத்தது. காங்கேயம் காளைகள், வெள்ளாடுகள் போன்ற கால்நடைகள் கண்காட்சியும் உறவினர்களை வெகுவாகக் கவர்ந்தது.
மேலும், கொங்கு மண்ணின் பண்பாட்டு முறைகளைப் பறைசாற்றவும் வருங்கால சந்ததிகளுக்கு இந்தப் பாரம்பரியத்தை நினைவு கூறவும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தச் சடங்கு விழா நடத்தியுள்ளதாக தாய் மாமன் ராஜா தெரிவித்துள்ளார். இந்தப் பூப்பு நன்னீராட்டு விழாவிற்கு வந்திருந்தவர்கள் விழா முடிந்து செல்லும்போது, திருவிழாவிற்கு வந்ததுபோன்ற உணர்வு ஏற்பட்டிருப்பதாகக் கூறினர்.