
நாமக்கல் அருகே, மூதாட்டி கொலை வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள செல்லியாயிபாளையத்தைச் சேர்ந்தவர் கொண்டாயி (60). இவருடைய உறவினர் மாயவன் (58). கூலித்தொழிலாளி. இருவரும் அக்காள், தம்பி உறவுமுறையாகின்றனர். இருவருடைய வீடும் அருகருகே உள்ளது.
அவர்களுக்குள் நிலப்பிரச்னை தொடர்பாக நீண்ட காலமாக தகராறு இருந்து வந்தது. கடந்த 2016- ஆம் ஆண்டு அக். 5- ஆம் தேதி, வீட்டிற்கு முன்புள்ள காலி நிலத்தில் கழிப்பறை கட்டுவது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மாயவன், கத்தியால் குத்தியதில் கொண்டாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மாயவனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, நாமக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத்தரப்பில் வழக்கறிஞர் சுசீலா ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த சசிரேகா, மாயவனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நவ. 10- ல் தீர்ப்பு அளித்தார்.