புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று (30/10/2022) சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும். கடந்த அக்டோபர் 25- ஆம் தேதி அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கிய திருவிழாவில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
ஐந்தாம் நாளான நேற்று (29/10/2022) வள்ளி- தெய்வானையுடன் ஜெயந்தி நாதர் சண்முக விலாஸ் மண்டபத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கோயிலில் தங்கி சஷ்டி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திரளான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதை யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (30/10/2022) மாலை திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற உள்ளது. இதற்காக 3000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரோனா காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.