'அரசியல் கூட்டங்கள், இல்ல விழாக்கள், மதரீதியிலான விழாக்களில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிப்பதைக் காணமுடிகிறது. தடை செய்யப்பட்ட பட்டாசு ரகங்களை இந்த விழாக்களில் வெடிக்கிறார்கள் என்றால் அதற்கான பட்டாசுகளை ஏன் தயாரிக்கிறீர்கள்' எனப் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வரப்போகும் பண்டிகை நாட்களில் மிகவும் குறிப்பிடத்தக்கப் பண்டிகையான தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை காலை மாலை என இரு வேளைகளிலும் தலா 4 மணி நேரம் அதிகரிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.
பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக் கோரிய தரப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், பட்டாசு தயாரிக்கப் பேரியம் ஆக்சைடை பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஐந்து பட்டாசுகள் மட்டுமே பசுமை பட்டாசாகத் தயாரிக்கப்படுகிறது. ஆனால் 300க்கு மேற்பட்ட ரகங்கள் விதிமுறைகளை மீறி உற்பத்தி செய்யப்படுகிறது எனத் தெரிவித்தார். இதன்பிறகு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், நீண்ட நேரம் வெடிக்கக்கூடிய சரவெடிகளைத் தயாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் அரசியல் கூட்டங்கள், திருமணங்கள், மதரீதியான நிகழ்ச்சிகளில் அந்த தடை செய்யப்பட்ட பட்டாசுதான் அதிகமாக வெடிக்கப் படுகிறது. அப்பொழுது நாள்தோறும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்படுகிறதா என நீதிபதிகள், கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த பட்டாசு தயாரிப்பாளர்கள் தரப்பினர், சிறிய அளவிலான பட்டாசுகளைத் தான் நாங்கள் தயாரிக்கிறோம். பொதுமக்கள் தான் அதை ஒன்றாக இணைத்து பெரிதாக மாற்றிக் கொள்கின்றனர் எனக் கூறினர். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏன் விதிமுறைக்குப் புறம்பாகத் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை உற்பத்தி செய்கிறீர்கள் எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.