தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. ஆளுநரின் இச்செயலுக்கு பல கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து முடிவெடுக்க சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது.
மொத்தம் 13 சட்டமன்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று கூடிய கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 10 கட்சிகள் பங்கேற்றன. இக்கூட்டத்தை அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் ஆகிய மூன்று கட்சிகள் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு கூட்டத்திற்கான தேதியை சபாநாயகர் அப்பாவு விரைவில் அறிவிப்பார் என்று கூட்டம் முடிந்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னதாக தமிழ்நாடு நுழைவுத் தேர்வில் இருந்து விலக்குப் பெற்றத்தை சுட்டிக்காட்டினார். மேலும், “ஜனவரி 12ஆம் தேதி காணொளி வாயிலாக பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார். அப்போதே காணொளி வாயிலாகவே நானும் நீட் விலக்கு குறித்து பிரதமரிடம் வலியுறுத்தியிருந்தேன்” என்றார்.
மேலும் அவர், “நீட் தேர்வு செல்லும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருப்பதாக மேற்கோள் காட்டியிருக்கிறார். ஆனால், நீட் விலக்கு சட்ட முன்வடிவு, நமது சட்டமன்றத்தின்; எட்டு கோடி மக்களின் உணர்வுகளை வெளிபடுத்தும். தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்டம் ஏற்றும் அதிகாரம் தொடர்புடையது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மை தொடர்பானது. அந்த தீர்ப்பு வேறு; தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்டம் ஏற்றும் அதிகாரம் என்பது வேறு. அதனால்தான் இந்த சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை கோருகிறோம். குடியரசுத் தலைவர் முடிவெடுக்கும் முன்பே, ஆளுநர் சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பியிருக்கிறார்” என்று பேசினார்.