மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் தர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவ படிப்பில் 50% ஓபிசி இட ஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என நாகேஷ்வர ராவ் தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இன்று (26/10/2020) தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளன.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்பில் 50% ஓபிசி இடஒதுக்கீட்டை பெற பிரதமருக்கு முதல்வர் அழுத்தம் தர வேண்டும். இந்தாண்டு இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என முதல்வர் அறிவிக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 21 நாளில் இட ஒதுக்கீடு அளித்தது மத்திய அரசு. உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் காட்டிய அவசரத்தை ஓபிசி பிரிவினருக்கும் காட்ட வேண்டும். ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது சமூக நீதி வரலாற்றில் கரும்புள்ளி" என தெரிவித்துள்ளார்.