Skip to main content

ஞாயிறு ஊரடங்கு; தேவையற்று சுற்றியவர்களை எச்சரித்த காவல்துறையினர்

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகம் பரவி வருவதால், தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் ஒன்றாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முழு முடக்கத்தை அரசு அமல்படுத்தியது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. 

 

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரைப் பகுதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம், ஏர்வாடி முக்கு ரோடு, வள்ளல் சீதக்காதி சாலை போன்ற முக்கிய சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. மேலும் அத்தியாவசியத் தேவைகளான பால், மருந்தகங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கீழக்கரை டி.எஸ்.பி. சுபாஷ் தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக சுமார் 64க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக மாநகரில் மட்டும் 25 சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் 1,000 போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.


இந்நிலையில், நகர் முழுவதும் ஆய்வு செய்த எஸ்.பி. ஜெயக்குமார், முகக் கவசம் அணியாதவர்களைக்  கடுமையாக எச்சரித்தும், தேவையில்லாமல் சுற்றுபவர்களை அழைத்துக் கண்டித்தும் அனுப்பினார். தவிர, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முகக் கவசம் அணியாதவர்கள், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள் என்று 6,200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் மாவட்டக் காவல் துறையினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்