Skip to main content

சுண்டல் பயிர்களை அழிக்கும் புழுக்கள்! குமுறும் விவசாயிகள்!

Published on 18/01/2019 | Edited on 18/01/2019

 

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பகுதியில் உள்ள கரிசல் பூமிகளான கரிசல்பட்டி, கோனூர், அனுமந்தராயன்கோட்டை, தருமத்துப்பட்டி, கசவனம்பட்டி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அப்பகுதி விவசாயிகள் பணியில் விளையக்கூடிய பயிரான சுண்டல் பயிரை (கொண்டைக்கடலை) பயிரிட்டு வருகின்றனர். 
 

தற்போது கார்த்திகை மாதம் பயிரிட்டிருந்த சுண்டல் பயிர் நன்கு விளைந்து காய் காய்த்து அறுவடை செய்யும் நேரத்தில் பச்சை புழுக்கள் தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
 

மேலும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட வேளாண் அதிகாரிகள் சரிவர தங்கள் பகுதிக்கு வராமல் இருப்பதால் விவசாயிகள் புழுக்களை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். 
 

இதுகுறித்து கோனூர் பகுதி விவசாயிகள் கூறுகையில், நாங்கள் கோனூர் பிரிவு பகுதியில் சுண்டல் பயிர் பயிரிட்டிருந்தோம். நன்கு விளைந்து அறுவடை செய்யும் நேரத்தில் பச்சை புழு தாக்குதலால் எங்களால் எதுவும் செய்யமுடியாமல் திணறி வருகிறோம். 

விவசாய துறை அதிகாரிகள் சரிவர எங்கள் பகுதிக்கு வருவதில்லை இதனால் எந்த பயிர் பயரிடுவது என தெரியாமல் ஒரு விவசாயி பயிரிட்டுள்ள பயிரையே அனைத்து விவசாயிகளும் பயிரிட்டு வருகிறோம். புழுக்களை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என்றனர். 
 

விவசாயிகள் புகார் குறித்து ரெட்டியார்சத்திரம் ஒன்றிய வேளாண்மை உதவி இயக்குநர் திருமலைசாமியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, கோனூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சுண்டல் பயிரில் பச்சை புழுக்கள் ஆரம்ப கால நிலையிலேயே கட்டுப்படுத்தி இருக்கலாம். தற்போது புழுக்களின் வளர்ச்சியை பார்வையிட்ட பிறகு தான் புழுக்களை கட்டுப்படுத்த எந்த மருந்துகளை பயன்படுத்தலாம் என கூற முடியும்.
 

வேளாண் அலுவலர்களை சம்மந்தப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் பார்வையிட்டு வந்த பிறகு புழுக்களை ஒழிக்க மருந்துகளை விவசாயிகளிடம் தெரிவிக்க முடியும் விவசாயிகள் கெமிக்கல் மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தினால் புழுக்களை ஒழிக்க முடியும் என தெரிவித்தார். 

 


 

சார்ந்த செய்திகள்