திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக காலை 10 மணி அளவில் பத்தாவது நடைமேடையில் அபாய சங்கு ஒலித்தது. நடைமேடையில் இருந்த பயணிகள் அபாய ஒலி கேட்டு மிரண்டு ஓடியதால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது. அப்போது திருச்சி முதலியார் சத்திரம் பயணிகள் ரயில் பெட்டி தடம் புரண்டு விழுந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து ரயில்வேயில் உள்ள இயக்க பிரிவு மருத்துவக் குழு, ரயில்வே பாதுகாப்புப் படை, சிக்னல் கண்காணிப்புப் பிரிவு, ரயில்வே தீயணைப்புத்துறை, ரயில்வே போலீஸார் உள்பட 14 துறைகளின் அதிகாரிகள் உஷாராகி, மருத்துவ உபகரணங்கள், மீட்பு கருவிகளுடன் ஐந்து நிமிடத்தில் அங்கு விரைந்தனர்.
திருச்சி ரயில்வே கோட்ட உதவி மேலாளர் தலைமையில் ரயில்வே பாதுகாப்புப் படை முதுநிலை ஆணையர், ஆய்வாளர் தெய்வேந்திரன் உள்பட ஒரு காவல்துறை குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. அங்கு சென்றபோது ரயில் பெட்டி தண்டவாளத்தை விட்டு விலகிக் கவிழ்ந்து கிடந்தது. அதைச் சுற்றி ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினர் பாதுகாப்பு வளையத்தை உண்டாக்கி தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இவை அனைத்தும் முன்கூட்டியே அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு பயிற்சிக்காகச் செயல்படுத்தப்பட்ட ஒரு செயற்கையான விபத்து என்பது நீண்ட நேரத்துக்குப் பிறகே பொது மக்களுக்குத் தெரியவந்தது.
விபத்துக்குள்ளான ரயில் பெட்டிக்குள் பயணிகள் போல உருவ பொம்மைகள் தயார் செய்து வைக்கப்பட்டு, அவர்களை மீட்பது போன்ற ஒத்திகையை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மேற்கொண்டனர். மேலும், ரயில்வே ஊழியர்கள் சிலர் காயம் அடைந்து கை கால் எலும்பு முறிவு ஏற்பட்டது போலும் நடித்தனர். காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சில் கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிப்பது போல அனைத்தும் மிகத் தத்ரூபமான ஒத்திகையாக அரங்கேறியது. 2 ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இதுபோன்ற ரயில் விபத்து ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம். ரயில் விபத்துகளில், சரக்கு ரயில் விபத்து, பயணிகள் ரயில் விபத்து, பழுதாகி நிற்பது, பெரிய விபத்து என நான்கு வகை உள்ளது.
ஒவ்வொரு விபத்துக்கும் அபாய சங்கு ஒலிப்பதில் வித்தியாசம் காண்பிக்கப்படும். தற்போது திருச்சி ரயில்வே கோட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை இணைந்து இந்த ஒத்திகையை நடத்தியது. மீட்புக் குழு மற்றும் மீட்பு உபகரணங்களை விபத்து பகுதிக்கு துரிதமாக வரவழைப்பது. ரயில் பெட்டிகளில் சிக்கிய பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றுவது காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைவாகக் கொண்டு செல்லுதல், ரயில் வழித்தடத்தில் போக்குவரத்தை சீர் அமைத்தல் போன்ற அனைத்து காட்சிகளும் மிகத் தத்ரூபமாக எதார்த்தமாகச் சோதனை செய்து காட்டப்பட்டது.