திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்பொழுது சிக்கம்பிள்ளையார் கோவில் அருகிலுள்ள காந்தி ரோட்டில் சுரேஷ் என்பவர் கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை வைத்திருப்பதாக தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து நகராட்சி சுகாதார அதிகாரி மூர்த்தி, உணவு பாதுகாப்பு அதிகாரி ரங்கநாதன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். அப்பொழுது குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போன இறைச்சி அடுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
அதிகாரிகள் சுமார் 150 கிலோ எடையுள்ள கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர். மேலும் கடை உரிமையாளர் சுரேஷ் என்பவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் இவரிடம் இருந்து துறையூர் நகரில் உள்ள பல அசைவ உணவகங்களுக்கு இறைச்சி விற்பனை செய்து வருவதாகத் தெரியவந்தது.
கெட்டுப்போன ஆட்டிறைச்சியை அதிக அளவில் பறிமுதல் செய்துள்ளதால், துறையூர் நகரிலுள்ள அசைவப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது பற்றி கூறிய அதிகாரிகள், தொடர்ந்து இது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும், தரமற்ற இறைச்சிகளை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.