Skip to main content

திடீரென ஏற்பட்ட ஏற்றுமதி ரக மாற்றம்... விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த முடிவு..!

Published on 18/01/2021 | Edited on 18/01/2021

 

ஏற்றுமதி ரகத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக உள்நாட்டில் சரித்திரம் காணாத அளவில் நூல் விலை ஏற்றப்பட்டதால், தென்காசி மாவட்டத்தின் தொழில் நகரமான சங்கரன்கோவிலில் சிறு, குறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்து, கடந்த 16ஆம் தேதியிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அடித்தட்டு நெசவுத் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

சங்கரன்கோவில் மற்றும் அதன் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 5,000 விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. காலம் காலமாக இயங்கிவரும் விசைத்தறிகளை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பிணைந்துள்ளது.

 

இங்குள்ள விசைத்தறிகளில் தயார் செய்யப்படும் ஏற்றுமதி தரம் கொண்ட ‘நைஸ் ரக’ காட்டன் சேலைகள், பல்வேறு டிசைன்களில் தயார் செய்யப்படுகின்றன. தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, பீகார், மே.வங்கம் என வெளி மாநிலங்களே இதன் விற்பனைச் சந்தையாகும். குறிப்பாக அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரே பெரும்பாலும் இந்த ரக ஜவுளிகளின் வாடிக்கையாளர்கள்.

 

கரோனா காலத்திற்கு முன்புவரை இதன் மூலப் பொருளான நூலின் விலை கட்டுக்குள் இருந்து வந்திருக்கிறது. ஆட்கொல்லி வைரசான கரோனா தாக்கம் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஒன்பது மாத கால ஊரடங்கால் விசைத்தறிகள்  முடக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான நெசவுத் தொழிலாளர்களின் குடும்பங்கள் வேலையின்மை காரணமாக வறுமையின் பிடிக்குள்ளானது; அவர்களின் வாழ்வாதாரம் உருக்குலைந்தது. கரோனா கட்டுப்பாட்டிற்குப் பின்னர் ஊரடங்கு தளர்வு காரணமாக தொழில்கள் மெல்ல மெல்ல செயல்படத் தொடங்கிய பிறகும், ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவுத் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரங்களில் அத்தனை ஆரோக்கியமில்லை.

 

இந்தச் சூழலில், அடுத்த பேரிடியாக நூல் லிலையேற்றம் தொழிலையே ஸ்தம்பிக்கச் செய்கிற அளவுக்குப் போயிருக்கிறது.

 

‘ஒரு வகையில் இந்த திடீர் விலையேற்றம் சரித்திரம் காணாத அளவு என்று கூடச் சொல்லலாம்’ என்கிற ஜவுளி உற்பத்தியாளர்களின் சங்கம் மற்றும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரான சுப்பிரமணியன், “எங்களின் தயாரிப்புகள் அடித்தட்டு மக்களுக்கானது. அவர்களின் வருமான வரம்புதான் விற்பனையின் அச்சாணி. இத்தனை காலம் வரை நூல் விலையில் ஏற்றமிருந்தாலும் ஓரளவு சீராகவே சூழல்களிருந்தன. 

 

ஆனால், கரோனா காலத்திற்குப் பிறகு மூலப் பொருளான ஒருகட்டு சிட்டா நூலின் விலை ரூ.395 ஏற்றப்பட்டுள்ளது. இதனால், ரூ.1,485 என இருந்த ஒரு கட்டு சிட்டா நூலின் விலை தற்போது ரூ.1,880 என்றாகிவிட்டது. நாங்களே இந்த ஏற்றத்தை எதிர்பார்க்கவில்லை. அதே சமயம் மில்களுக்குரிய மூலப் பொருளான பஞ்சு விலையில் மாற்றமில்லை. ஆனால், திடீரென்று நூல் விலை ஏற்றப்பட்டிருக்கிறது. கரோனா முடக்கம், விற்பனை மற்றும் தொழில் என்று பல தரப்பிலும் பாதிப்பு. மேலும் இந்த விலையேற்றம் எங்களால் தாங்க முடியாத அடியாக எண்ணுகிறோம். ஏனெனில் நூல் விலையேற்ற அளவுக்குப் புடவைகளின் விலையை திடீரென்று ஏற்ற முடியாத நிலை. காரணம் மக்களின் வாங்கும் சக்தியோ சரிவில் உள்ளது.

 

எங்களுக்கு நூல் சப்ளை செய்கிற மில்களின் சிட்டா நூல் விலை, கோன் விலையைவிட வழக்கம் போல் சற்று அதிகமாகதானிருக்கும். தற்போது வெளிநாட்டில் கோன் உற்பத்திக்கு நல்ல விலை கிடைப்பதால், அனைத்து மில்களும் சிட்டா நூல் தவிர்த்து, லாபம் தருகிற கோன் உற்பத்திக்கு மாறியதால் அவைகளின் ஏற்றுமதி அதிகரித்துவிட்டது. எங்களுக்கான சிட்டா நூல் உற்பத்தியில் முடக்கம். அதனால்தான் உள்நாட்டில் எங்களின் உற்பத்திக்கு அத்யாவசியமான சிட்டா நூல் விலை இந்த அளவுக்கு உச்சத்திற்குப் போய்விட்டது. எனவே இதனை மட்டுப்படுத்தவும் விலையேற்ற விஷயத்தில் அரசு தலையிட்டு ஏழை மக்கள் நம்பியிருக்கும் இந்தத் தொழிலின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டி முறையாக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.

 

விலையேற்றம் காரணமாக தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் ஊசலாட்டத்தில் இருக்கின்றன.

 

சார்ந்த செய்திகள்