முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பெரியாறு அணையைக் கண்காணித்து பராமரிக்க, மூன்று பேர் கொண்ட 'கண்காணிப்பு குழுவை" உச்சநீதிமன்றம் நியமித்தது. அதன்பின் உச்சநீதிமன்றம் கண்காணிப்புக் குழுவில் இரு மாநில தொழில்நுட்ப வல்லுநர்களையும் சேர்க்க அறிவுறுத்தியது. தற்போது இந்த ஐவர் குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளரும், அணைகள் பாதுகாப்பு அதிகாரியுமான ராகேஷ் கஷ்யாப் உள்ளார்.
இந்த குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக கொச்சியிலுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு சிறப்புக் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் அனில்குமார், உதவிப் பொறியாளர் கிரண் ஆகியோர் இக்குழுவில் உள்ளனர்.
இக்குழுவினர் கடந்த ஜூலை மாதம் பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அணையில் செய்துவரும் வழக்க பணிகளையும், செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் இந்த துணை கண்காணிப்பு குழுவினர் இன்று அணையின் நீர் மட்டம் 120.55 கன அடியாகவும் அணைக்கு நீர் வரத்து 518.20 கன அடியாகவும் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 976.53 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 2736.90 மில்லியன் கன அடியாகவும் உள்ள நிலையில் ஆய்வு செய்கின்றனர்.
இந்த ஆய்வில் ஷட்டர் பகுதி, கேலரி, மெயின் அணை, அணையில் நீர்க்கசிவு, நீர் வெளியேற்றம், பேபி அணை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்கின்றனர். தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் படகுத்துறை மூலமாகவும் கேரள அதிகாரிகள் வல்லக்கடவு சாலை மார்க்கமாகச் சென்றனர். ஆய்வினை முடித்து முல்லைப் பெரியாறு அணையில் உள்ள அலுவலகத்தில் இரு மாநில அதிகாரிகளும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி இந்த ஆய்வு குறித்த அறிக்கைகளை மத்திய நீர்வள ஆணையத்திடம் சமர்ப்பிக்க இருக்கிறார்கள்.