கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அசோக் குமார் - ரமணி தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனைவி ரமணியை கொலை செய்து விட்டு கணவர் அஷோக் குமார் தலைமறைவானார். பின்னர் தனிப்படை அமைத்து போலீசார் அசோக்குமாரை கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கணவர் அஷோக் குமார் கொலைக்கான காரணமாக, தனது மனைவி புகார் அளித்த வந்த போது பழக்கம் ஏற்பட்டு தற்சமயம் திருக்கோவிலூரில் காவல் உதவி ஆய்வாளராக உள்ள நந்தகோபால் மற்றும் காவலர் பிரபாகரன் ஆகியோருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும், அதனைத் தட்டிக் கேட்டபோது தன்னிடம் சண்டையிட்டதால் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்திருந்தார்.
அசோக் குமாரின் வாக்குமூலத்தை தொடர்ந்து, திருக்கோவிலூரில் தற்சமயம் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த நந்தகோபாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி அழைத்து விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் உளுந்தூர்பேட்டையில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய போது நந்தகோபால் இறந்த ரமணியுடன் பழகியது விசாரணையில் உண்மை எனத் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, திருக்கோவிலூர் உதவி ஆய்வாளர் நந்தகோபால் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.