மீடூ விவகாரம் தமிழ்சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நடிகர் அர்ஜூன் மீது புகார் கூறியுள்ளார் சுருதி ஹரிகரன். தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் அர்ஜூன். 5 கோடி இழப்பீடு தரவேண்டும் என்று வழக்கில் கோரியுள்ளார்.
நிபுணன்! இது நடிகர் அர்ஜூன் நடித்த 150வது திரைப்படம். இப்படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்தது. இந்நிலையில், இப்படத்தில் நடித்த கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன், நிபுணன் படப்பிடிப்பின்போது அர்ஜூன் தனக்கு பாலியல் துன்புறுத்தல் தந்ததாக, அதாவது தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக மீடூவில் கூறினார்.
“நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. ஸ்ருதி ஹரிகரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள்” என்று தனது முகநூல் பக்கத்தில் அர்ஜூன் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நிபுணன் படத்தின் இயக்குநர் அருண் வைத்தியநாதன் இந்த விவகாரம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார். அதில், ’அர்ஜுன் சார், ஸ்ருதி ஹரிஹரன் இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள். எனக்கு அவர்கள் குடும்பங்களையும் நன்றாகத் தெரியும். அர்ஜுன் சாரைப் பொருத்தவரையில், அவர் ஷூட்டிங்கில் ஒரு ஜென்டில்மேன். நடிப்புக் கலையில் சிறந்த தொழில் நுணுக்கம் அறிந்தவர். ஸ்ருதியும் அப்படியே. அர்ஜுன் சார் மீது ஸ்ருதி கூறியிருக்கும் மீ டூ குற்றச்சாட்டு குறித்து அறிந்து அதிர்ச்சியட்டைந்தேன்.
ஸ்ருதி குறிப்பிட்டுள்ள குறிப்பிட்ட காட்சி ஒரு நெருக்கமான ரொமாண்டிக் காட்சி. அதற்கு ரிஹர்சல் பார்த்து, அது குறித்து விவாதித்தோம் பின்னர் அந்த காட்சியை படமாக்கினோம். பொதுவாக ஷூட்டிங் ஸ்பாட்டில் சில காட்சிகளை இம்ப்ரொவைஸ் பண்ணுவது வழக்கம் தான். அதன்படியே இந்த காட்சியும் எடுக்கப்பட்டது. ஸ்ருதி கூறிய இச்சம்பவம் 2 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்பதால் எனக்கு சரியாக நினைவில் இல்லை. அந்த ரொமாண்டிக் காட்சி, எடுக்கப்பட்டதை விட, எழுதப்படும்போது இன்னும் அன்னியோன்னியமாக எழுதப்பட்டிருந்தது. அர்ஜுன் சார் அதை ஸ்க்ரிப்டிலேயே குறைக்கச் சொன்னார். 'எனக்கு டீனேஜ் மகள்கள் இருக்கிறார்கள். நான் இனிமேலும் அப்படியான காட்சிகளில் நடிக்க முடியாது' என்றார். அதைப் புரிந்துகொண்டு மாற்றி அமைத்தேன்’’என்று தெரிவித்திருந்தார்.
மேலும் இருவருக்கும், ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு நடிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் அர்ஜூன் தனது திரையுலக வாழ்வில் இதுவரை சேர்த்து வைத்துள்ள பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் விளைவிக்கும் வகையில் ஸ்ருதிஹரிகரன் குற்றம்சாட்டியுள்ளார் என்று அவருக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் வழக்கின் மனுவில் கோரியுள்ளார்.
அர்ஜூன் தொடுத்துள்ள இந்த வழக்கை தான் எதிர்கொள்ளத் தயார் என்றும் ஸ்ருதிஹரிகரன் தெரிவித்துள்ளார்.