10, 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி பல இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது.
தொடர் கனமழை மற்றும் இடி மின்னல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சுமார் 135 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளது. அதில் உள்ள பீங்கான்கள் முற்றிலுமாக சேதமடைந்த நிலையில் அதனை மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதீத கனமழை காரணமாக சீர்காழியில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் சுமார் 40 கிராமங்களுக்கு மின் இணைப்பு முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின்மாற்றிகள் பழுது காரணமாக மின்சார விநியோகம் சில இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் இன்று மாலைக்குள் நிலைமை சீர் செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ள நீர் பகுதியில் இருக்கும் மின் கம்பம் ஒன்றில் மின்வாரிய ஊழியர்கள் உயிரைப் பணயம் வைத்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மெய்யநாதன் ஆய்வு செய்தனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் தங்களது உடைமைகளை இழந்துள்ளோம். பள்ளி பாடப்புத்தகங்கள், ஆதார் கார்டு உள்ளிட்டவை சேதமடைந்ததால் அவற்றதை திரும்பதர ஏற்பாடு செய்ய வேண்டும், உடனடியாக நீரை அகற்ற வேண்டும் என அமைச்சர்களிடத்தில் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.