தலைநகரத்தையே அதிரவைத்த நாய்க்கறி சர்ச்சையில் "சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறியா? இல்லை ஆட்டுக்கறியா? என்று பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவந்த நிலையில், கைப்பற்றப்பட்டது ஆட்டுக்கறி என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக நேற்று தகவல்கள் வந்த நிலையில், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட இறைச்சி புதைக்கப்பட்டுவிட்டதாக உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து சென்னை ஹோட்டல்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட 'கறி பார்சல்'கள் ஆட்டுக்கறிபோல் இல்லை என்ற சந்தேகம் எழுந்ததால் கைப்பற்றப்பட்ட 'கறி பார்சல்' சென்னை வெப்பேரியிலுள்ள தமிழக அரசின் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை அடுத்து நேற்று கால்நடை கல்லூரியின் ஆய்வு முடிவில் கைப்பற்றப்பட்ட இறைச்சி ஆட்டுக்கறி என உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வந்தநிலையில்
ரயிலில் கொண்டுவரப்பட்டது நாய்க்கறியா? அல்லது ஆட்டுக்கறியா? என்ற ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததது. இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் இன்று நடந்த விசாரணையில், உணவு மற்றும் மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி பறிமுதல் செய்யப்பட்டது இறைச்சி ஆட்டுக்கறி என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், மேலும் கைப்பற்றப்பட்ட அந்த இறைச்சி தரமற்ற முறையில் இருந்ததால் கொடுங்கையூரில் புதைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தனர்.
இதனை அடுத்து எதன் அடிப்படையில் இறைச்சியை புதைத்தீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதி சம்பந்தப்பட்ட இறைச்சியை புதைக்கப்பட்டதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க கோரி வழக்கை டிசம்பர் 6ஆம் தேதி ஒத்திவைத்தார்.