வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஆசிரியரை வகுப்பெடுக்கவிடாமல் அவரை கிண்டல், கேலி செய்தும். அவரின் நாற்காலியை இழுத்துத் தள்ளி வைத்து அவரை உட்காரவிடாமல் செய்தும், டிக் டாக் வீடியோ செய்தும் அதனை சமூக வலைதளத்திலும் பதிவிட்ட பிளஸ் 2 மாணவர்கள் ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டை கடந்து இயங்கிவருகிறது.
இந்தப் பள்ளியில் வணிகவியல் பிரிவு ஆசிரியர் கடந்த சில நாட்களுக்கு முன் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மாணவர்கள் ஆசிரியரை வகுப்பு எடுக்கவிடாமல் தொடர்ந்து அவரை கேலி கிண்டல் செய்து தொந்தரவு செய்துவந்தனர். அவரின் நாற்காலியை இழுத்துவிட்டு அவரை உட்காரவிடாமலும் செய்தனர். மேலும் டிக் டாக் வீடியோ செய்தும் அதனை சமூக வலைதளத்திலும் பதிவிட்டிருந்தனர்.
இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் சிவா தலைமையிலான கல்வி அதிகாரிகள் கடந்த வாரம் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேராக சென்று ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ஆசிரியரிடம் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்த மாணவர்களின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தினர். அதன்பிறகு அந்த அறிக்கையை கல்வித்துறை இயக்குநரகம், வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்துகொண்ட மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த ஆறு மாணவர்களை பள்ளிச் செயலாளர் நேற்று சஸ்பெண்ட் செய்தும், அதற்கான கடிதத்தை பள்ளி விளம்பரப் பலகையில் ஒட்டியும் உள்ளனர். அதேசமயம் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு பொதுத்தேர்வு எழுத அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.