சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "குருநானக் கல்லூரியின் அறக்கட்டளை கடந்த 1971- ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. குருநானக் கல்லூரி 50-வது ஆண்டு பொன்விழாவும் தி.மு..க. ஆட்சியில் தான் கொண்டாடப்படுகிறது. குருநானக் கல்வி நிறுவனம் தமிழக அரசுக்குப் பல நிலைகளில் பெரிதும் உதவியுள்ளது. பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கரோனா தொற்றால் எனது தொண்டை பாதிக்கப்பட்டு இருந்தாலும், தொண்டு பாதிக்கப்படவில்லை. கல்வி நிறுவனம் நடத்துவோர், தொழில் வர்த்தகமாக இல்லாமல் தொண்டாக நினைக்க வேண்டும். மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது; தற்கொலை எண்ணம் கூடவேக் கூடாது. ஆசிரியர்கள், பெற்றோருடன் மனம் விட்டு பேசுங்கள். படிப்போடு கல்வி முடிவதில்லை; பாடம் நடத்திய பிறகு ஆசிரியர் பணி முடிந்துவிடாது. மாணவிகளுக்கு மன, உடல் ரீதியாக இழி செயல் நடந்தால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது. தொல்லைகள், அவமானத்தை மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
சமீப காலமாக தமிழகத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் என்னை மனவேதனை அடைய வைத்துள்ளன. எத்தகைய சோதனைகளையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் பெற்றவர்களாக மாணவச் செல்வங்கள் வளர வேண்டும்" எனத் தெரிவித்தார்.