பேருந்து வராததால் தந்தையை பறிகொடுத்த மாணவன்!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (எ) பன்னீர்செல்வம். இவருக்கு பசுபதி பாண்டியன் (12) பகவதி (9) என்ற இரு மகன்கள் உள்ளனர். பசுபதி பாண்டியன் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். வழக்கமாக இலவச பயணமாக அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்றுவந்தான்.
இன்று காலை 9 மணி வரை பேருந்து வரவில்லை. அதனால், தனது தந்தையிடம் ‘என்னை பள்ளியில் கொண்டு வந்து விடுங்கப்பா’ என்று சொல்ல.. பெட்ரோல் குறைவாக உள்ளது என்று தந்தை மறுத்திருக்கிறார். ‘இருக்கிற பெட்ரோல்ல போகலாம், வாங்க..’ என்று மகன் அழைக்க மகனின் படிப்பை கருத்தில் கொண்டு தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு கந்தர்வகோட்டை நோக்கி சென்றபோது, மங்கனூர் விலக்கு சாலை அருகே பெட்ரோல் இன்றி பைக் நின்றது.
பெட்ரோலை அளந்து பார்க்க மகனை அருகில் கடந்த குச்சியை எடுக்கச் சொல்லியிருக்கிறார் பன்னீர்செல்வம். அப்போது மகன் அந்தப் பக்கம் போன நேரத்தில் அந்த வழியாக சென்ற ஒரு கார் பன்னீர்செல்வம் மீது மோதியதில் அலறலுடன் கீழே விழுந்தார். சத்தம் கேட்டு பசுபதி பாண்டியன் திரும்பி பார்க்கும் போது, மகன் கண்முன்னேயே தந்தை பலியாகிவிட்டார்.
பஸ் ஓடாதததால் தன்னை பள்ளியில் விட வந்த தந்தை, தன் கண் முன்னே பலியான சம்பவத்தால் பசுபதி மயங்கி சரிந்தான். போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனையில் அரசு காட்டி வரும் மௌனத்தால், வரிசையாக விலைமதிப்பற்ற உயிர்கள் இந்த உலகை விட்டு பிரிந்துகொண்டிருக்கின்றன. தந்தையை இழந்த மாணவனின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.
- இரா.பகத்சிங்