Skip to main content

வனப்பகுதியின் நடுவே அமர்ந்து ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவி!

Published on 29/06/2021 | Edited on 29/06/2021

 

The student who went six kilometers and wrote the online exam

 

நெல்லை மாவட்டத்தின் அம்பை நகர் அருகே உள்ள பாபநாசம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளது. இந்த மலைப் பகுதியில் காரையாறு - முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதி அமைந்திருக்கிறது. முழுக்க முழுக்க வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் முண்டந்துறை புலிகள் வனக் காப்பகம் தடைசெய்யப்பட்டப் பகுதியாகும். குறிப்பாக தரைப் பகுதியிலிருக்கும் தொழில்நுட்ப வசதிகள் இந்த முண்டந்துறை மலையின் மீது கிடையாது. அதன் காரணமாகவே அங்கு செல்ஃபோன் டவர்கள் ஏதும் அமைப்பதற்கு வனத்துறை அனுமதிப்பதில்லை. ஏனெனில் அவ்வாறு அமைக்கப்படுமேயானால் அது தொடர்பான சிக்னல்கள், அதிர்வலைகள் மற்றும் ஆட்கள் புழங்குவது புலிகளின் சுதந்திர நடமாட்டத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதால்தான்.

 

முண்டந்துறை மலைப்பகுதிக்கு மேலே காரையாறு, சேர்வலாறு, மயிலாறு, இஞ்சிக்குழி உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்த மலைப் பகுதியில் பழங்குடியின மக்களான காணிகள், குடும்பம் குடும்பமாக வசிக்கின்றனர். இவர்கள் தங்களின் தொடர்புகளுக்காக செல்ஃபோன்கள் வைத்திருந்தாலும் செல்டவர் இல்லாததால் வெளிப்பகுதியினர் யாரையும் தொடர்புகொள்ள இயலாது. வாரம் ஒருமுறை தங்களின் விளை பொருட்களை விற்பதற்காக பாபநாசம் நகருக்குத் தரையிறங்கும்போதுதான் அவர்கள் மற்றவர்களைத் தொடர்புகொள்ள முடியும். தங்களது டீலிங்குகளை அன்றைய தினம் மட்டுமே வைத்துக்கொள்கிறார்கள். ஏனெனில் மலையேறிவிட்டால் தொடர்பு கட் ஆகிவிடும் என்பதே. 

 

The student who went six kilometers and wrote the online exam

 

அடிப்படை வசதியில்லாத இங்குள்ள காணி இன மக்களின் பிள்ளைகள் ஆரம்பக் கல்வியை அங்குள்ள காணியின அரசுப் பள்ளியில் மட்டுமே படிக்க முடியும். மேற்படிப்பு படிக்க வேண்டுமென்றால் கீழேயுள்ள பாபநாசம், வி.கே.புரம் நகருக்குத் தரையிறங்க வேண்டிய கட்டாய நிலை. அடிப்படைத் தேவையான கல்வியைக் கற்பதற்குக் கூட மலைமீதுள்ள காணியின மக்களின் பிள்ளைகள் பெரும் சிரமத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. இது காலம் காலமாக நடைபெற்றுவரும் அவலங்களில் ஒன்று. போக்குவரத்து வசதி என்றால் கரையாறு பகுதிவரை மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மற்றபடி இந்த இன மக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரடி போக்குவரத்து கிடையாது. இங்குள்ள காரையாறு பழங்குடியின காணியின மக்களின் பிள்ளைகள் வி.கே.புரம் பள்ளிகளில் 10, 11, 12ஆம் வகுப்பு பயின்றுவருகின்றனர். நேரடி படிப்பின்றி ஆன்லைன் கல்வி படிப்புதான். இவர்களுக்கு செல் டவர் இல்லாததால் அது எட்டாக் கனியாகிவிட்டது. 

 

கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக லாக்டவுண் அறிவிக்கப்பட்டதால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த டிசம்பரில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டன. ஆனால் காரையாறு பகுதியான மயிலாறு, இஞ்சிக்குழி பகுதியின் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் செல்ஃபோன் டவர் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் படிப்பது பெரிய சிரமமாக இருந்திருக்கிறது. மயிலாறு காணிக்குடியிருப்பின் பின்பகுதியின் தரைமட்டத்திலிருந்து சுமார் 300 அடியிலுள்ள சொங்கமொட்டை மலைப்பகுதியின் உச்சியில் செல்டவர் கிடைப்பதையறிந்து, அந்தப் பகுதிக்குச் சென்று மாணவர்கள் மலை முகடுகளில் அமர்ந்தபடி ஆன்லைன் கல்வி கற்றிருக்கிறார்கள். மழை மற்றும் வெயிலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கொட்டகைகள் அமைத்து ஆன்லைன் வகுப்புகளில் பாடம் கற்றிருக்கின்றனர்.

 

The student who went six kilometers and wrote the online exam

 

இந்த மாணவர்கள் இப்படி சிரமங்கள் அனுபவிக்கின்ற நேரத்தில் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தற்போது ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடந்துவருகிறது. சேர்வலாறில் பெயருக்கு வசதிகள் இருந்தாலும் டவர் கிடைக்க அங்கு வாய்ப்பில்லை. சேர்வலாறு காணி குடியிருப்பைச் சேர்ந்த அமல்ராஜ் மகள் ரம்யா என்பவர் பாபநாசம் கல்லூரி ஒன்றில் பி.ஏ. வரலாறு மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். தற்போது இவருக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வு நடந்துவருகிறது. மலைமீதுள்ள மாணவர்களில் கல்லூரி படிப்பை மேற்கொண்டிருக்கும் ஒரே ஒரு மாணவி ரம்யாதான்.

 

தங்களது குடியிருப்பினருகில் செல் டவர் இல்லாததால் பரீட்சை எழுத திணறினார். வேறு வழியின்றி அங்கிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிருக்கும் லோயர்டேம் பகுதியில் டவர் லைன் கிடைப்பதையறிந்து தனது உறவினர் இசக்கி ராஜா துணையோடு ஆறு கிலோ மீட்டர் நடந்து சென்று சாலையோரத்தில் இருக்கும் பாலத்தில் அமர்ந்தபடி ஆன்லைன் செமெஸ்டர் தேர்வு எழுதிவருகிறார். கொளுத்தும் வெயிலையும் அவர் பொருட்படுத்தவில்லை. மழையோ அல்லது வழக்கமான காட்டு மிருகங்களின் இடையூறோ ஏற்பட்டால் அவரது நிலை அதோ கதிதான். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இன்னல்களை அனுபவித்துக்கொண்டு மன வைராக்யத்தோடு அவர் வெட்டவெளியில் தேர்வு எழுதுவதுதான் பார்ப்பவர்களின் மனதைப் பிழியும் விஷயம்.

 

The student who went six kilometers and wrote the online exam

 

இதுகுறித்து அந்த மாணவி கூறியதாவது, “செல் டவர் கிடைக்காததால் நான் இந்தத் தேர்வை அரியர் போடலாம் என்று கூட கருதாமல் டவர் லைன் கிடைக்கும் இடத்தைத் தேடிச் சென்று தேர்வு எழுதிவருகிறேன். என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டல்ல. ஆறு நாட்களும் இந்த முறையிலேயேதான் தேர்வு எழுதியே ஆக வேண்டும் என்ற மன உறுதிதான் என்னை இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க வைத்திருக்கிறது” என்கிறார் மனம் நெகிழ. பழங்குடி இன மலைக் காணி மக்களின் மாணவர்களுக்கு ஏற்படும் இந்த தொந்தரவு குறித்து மாவட்ட கலெக்டரான விஷ்ணுவிடம் கேட்டபோது, “அவர்களின் சிரமங்களை நான் அறிவேன். விரைவில் வனத்துறையினருடன் பேசி நல்லதொரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பேன்” என்றார் உறுதியாக. சுற்றுப்புறச் சூழல் சீராக இருந்தால்தான் ஒருவரின் மனம், நினைவுகள் ஒருமுகப்படும். அது தவறுமேயானால் அனைத்தும் நொறுங்கிவிடும். ஆனால் ரம்யாவுக்கோ இது ஒரு பொருட்டல்ல என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

 

 

சார்ந்த செய்திகள்