ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த அலங்காரியூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன். கூலி தொழிலாளியான இவருக்கு சுரேஷ் கிருஷ்ணன்(14) என்ற மகன் உள்ளார். அவர் பூதப்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சென்ற 27ஆம் தேதி செகன்ட் மிட்டம் தேர்வு முடிந்து மார்க் சீட் மாணவனுக்கு கொடுக்கப்பட்டது. இதில் சுரேஷ் கிருஷ்ணன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாக தெரிகிறது. தனது தந்தையிடம் மார்க்சீட்டை காண்பித்து கையெழுத்து வாங்க மாணவன் சுரேஷ் கிருஷ்ணன் மிகவும் பயந்து போய் வீட்டிலிருந்த ஒரு விஷ மருந்தை குடித்து விட்டான்.
பிறகு வாந்தி எடுத்துள்ளான் இது பற்றி அவனது தந்தை கேட்டபோது, தான் மார்க் குறைவாக எடுத்தால் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் அந்தியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை முடிந்து மாணவன் வீடு திரும்பினார் . ஆனால் மீண்டும் வாந்தி எடுத்துள்ளான்.
இதையடுத்து சுரேஷ் கிருஷ்ணனை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேஷ் கிருஷ்ணன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.