கரூர் மாவட்டம், தரகம்பட்டியை அடுத்துள்ள கொளுத்தினிப்பட்டியில் படித்து வரும் தம்பதியர் சேகர் மற்றும் லட்சுமி . இவர்களது மகள் ப்ரீத்தி(18) உப்பிடாமங்கலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த இவர் இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார். இதற்காக லாலாபேட்டையை அடுத்த வேங்காம்பட்டியில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டிலேயே தங்கி படித்து கொண்டிருந்தார். இதனிடையே நீட் தேர்வு எழுதிய ப்ரீத்தி கடந்த வருடத்தை போலவே, இந்த வருடமும் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவேனோ என்று அடிக்கடி பாட்டியிடம் புலம்பி கொண்டே இருந்துள்ளார். நாளுக்கு நாள் நீட் தேர்வு பயம் அதிகமாகி கொண்டே வந்துள்ளது.
இந்நிலையில் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ப்ரீத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்றைய தினம், அதே பகுதியில் உள்ள வீட்டில் துக்க நிகழ்ச்சி ஒன்றிற்கு வீட்டில் இருந்த அனைவரும் சென்றுவிட்டனர். ஆனால் ப்ரீத்தியின் பாட்டி மட்டும் துக்க நிகழ்ச்சிக்கு போகாமல், வீட்டிற்கு வெளியே திண்ணையில் உட்கார்ந்திருந்தார். வீட்டிற்குள் தனியாக இருந்த போது தான் மாணவி ப்ரீத்தி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். பாட்டி வெளியில் இருந்து, பேத்தியை பலமுறை கூப்பிட்டும் பதில் வரவில்லை. அதனால் சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பார்த்த போது ப்ரீத்தி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அலறியுள்ளார். அதற்கு பிறகு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ப்ரீத்தியின் பெற்றோருக்கும், லாலாபேட்டை போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ப்ரீத்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இன்றளவும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பே நிலவி வருகிறது. நீட் தேர்வினால் ஏழை மாணவர்களுக்காக மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவதில்லை என்று பரவலாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட்தேர்வு, பல மாணவ, மாணவியரின் உயிருக்கும் உலை வைத்து வருகிறது இதயத்தை பிசைந்தெடுத்து வருகிறது.