இ.ந்.தி.யா கூட்டணியில் உள்ள 16 மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து "யுனெடெட் ஸ்டூடென்ஸ் ஆஃப் இந்தியா" என்ற அமைப்பு உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பு இன்று செயிண்ட் பீட்டர்ஸ் மைதானம் முதல் ராபின்சன் பூங்கா வரை மாபெரும் மாணவர் பேரணியை நடத்தியது. இப்பேரணியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். மேலும், பேரணியின் நிறைவில், தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.
‘கல்வியை காப்போம் தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிப்போம்; இந்தியாவை காப்போம் பா.ஜ.க.வை நிராகரிப்போம்’ என்ற முழக்கத்துடன், கடந்த 12.01.2024 தேதியன்று, தலைநகர் டெல்லியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற நாடாளுமன்றம் நோக்கிய மாபெரும் மாணவர் பேரணி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக யுனெடெட் ஸ்டுடென்ஸ் ஆஃப் இந்தியா கூட்டமைப்பு சென்னையில் இன்று நடத்தியது.
இந்தப் பேரணி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை 2020 மாணவர்களின் கல்வி உரிமைக்கு எதிரானது. அது கல்வியை காவிமயமாக்கவும், வணிகமயமாக்கவும், கார்ப்பரேட்களிடம் தாரை வார்க்கவும், அனைவருக்குமான கல்வி உரிமையை மறுக்கவும், இந்தி, சமஸ்கிருத திணிப்பிற்கும் அடித்தளமிடுகிறது. இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்து ஒற்றைப் பண்பாட்டு தேசமாக அதிலும் குறிப்பாக சமஸ்கிருத பண்பாட்டுத் தேசமாக இந்தியாவை கட்டமைக்க வழிவகுக்கும் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நிராகரிக்க வேண்டுமென்றும், கல்வியே ஒரு மனிதனுக்கு அறிவையும், ஆற்றலையும் சுயசிந்தனையும், சுய மரியாதையையும், சுதந்திரத்தையும் வழங்கக்கூடியது. தனிமனித சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் மாண்பு. அந்த ஜனநாயகத்தை காக்கும் தூணாக விளங்கும் கல்வியை ஏழை எளியோரிடமிருந்து பறித்து, பணக்கார வர்க்கத்திடம் வழங்க சதிதிட்டம் செய்கிறது பா.ஜ.க. அரசு. அதன்மூலம் கல்வி மறுக்கப்பட்ட சமூக நிலையை மீண்டும் கட்டமைக்கவே விரும்புகிறது தேசிய கல்விக் கொள்கை-2020. கல்வி மறுக்கப்பட்ட சமூகம் தனது சுயமரியாதையும், சுதந்திரத்தையும் இழந்துவிடும். அரசியலமைப்புச்சட்டம் வழங்கிய அத்தனை உரிமைகளையும் இழக்கச் செய்து சுதந்திரமற்றவர்களாய், சுயமரியாதை அற்றவர்களாய், ஒட்டுமொத்த ஜனநாயகத்தை அழிக்க முயல்கிறது பா.ஜ.க. அரசு’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.