புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம், வாசகர் பேரவை இணைந்து நடத்திய மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பயனுள்ள தகவல்களைப் பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சியை புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் மற்றும் வாசகர் பேரவை இணைந்து நடத்தியது. பள்ளி தலைமை ஆசிரியர் யோகராஜா தலைமையில் நடந்த விழாவில் பத்திரிகையாளர் சங்க செயலாளர் ஜெயப்பிரகாஷ், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் கவிஞர் சு. மதியழகன் வரவேற்றார். கலைஞர்கள் அறிவொளி கருப்பையா, தமிழரசன் ஆகியோர் மாணவர்களை உற்சாகமூட்ட பாடல்களைப் பாடினர்.
நிகழ்வில் மாவட்ட மனநலத்திட்ட அலுவலர் மரு. கார்த்திக் தெய்வநாயகம் கலந்து கொண்டு பேசும்போது, “மாணவப் பருவத்தில் மன அழுத்தம் தேவையில்லை. எந்தப் பாடத்தையும் கஷ்டப்படாமல் கவனச் சிதறல் இல்லாமல் இஷ்டப்பட்டு படித்தால் எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும். அதே போல இந்த மாணவப் பருவத்தில் தான் தவறான வழிக்கு திசை திருப்பும் முயற்சிகள் நடக்கும். சக நண்பர்களுடன் செல்லும் போது விளையாட்டாக போதைப் பொருளை முதலில் உட்கொள்ளச் சொல்லும் போது மனம் தடுமாறாமல் தவிர்க்க வேண்டும். முதலில் என்னதான் செய்கிறது பார்ப்போம் என்று ருசிக்கத் தொடங்கிவிட்டால் அந்த ருசி உங்களை விட்டுப் போகாமல் ஆட்கொண்டுவிடும் அதுதான் போதைக்கு அடிமையாவது என்பது. அதன் பிறகு உங்கள் புத்தி உங்களிடம் இருக்காது மனம் ஒன்று நினைக்கும் செயல் வேறாக இருக்கும். இதனால் கண்டவர்களிடமும் கெட்ட பெயர் வாங்க வேண்டிய நிலை வரும். அந்த நிலைக்கு வராமல் தடுக்க ருசி பார்ப்பதையே தவிர்க்க வேண்டும்.
தொடர்ந்து, ‘நான் ஏன் படிக்க வேண்டும்’ என்று ஒரு மாணவன் கேள்வி எழுப்பியதைப் பார்த்து சக மாணவர்கள் சிரித்தபோது சரியான கேள்வி என்ற மருத்துவர், “நாம் சுயமாக சிந்திக்கவும், சுயமாக செயல்படவும் கல்வி அறிவு அவசியம். நம் தாத்தா, அப்பா அறிந்து கொள்ள முடியாத பல விசயங்கள் நமக்கு தெரிகிறது. அதற்கு காரணம் கல்வி தான்” என்றவர் பல மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் கூறினார். மேலும், “உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், கவலைகளை போக்க உடனே மாவட்ட மன நலத்திட்ட அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பேசுங்கள்” என்றார்.
தொடர்ந்து வாசகர் பேரவை செயலாளர் ஓய்வுபெற்ற பேராசிரியர் விஸ்வநாதன் பேசும்போது, “பள்ளி மாணவர்கள் விருப்பப்பட்டு படிக்க வேண்டும். நீங்கள் எந்த துறையில் ஆளுமையாக வரவேண்டும் என்பதை முடிவெடுங்கள். அதற்கான படிப்புகளை படியுங்கள் வேலை, தொழில் நிச்சயம் உண்டு. எதைப் படித்தாலும் தாய்மொழியில் படிக்கும் போது கூடுதல் பலமுண்டு. தமிழ் வழியில் படித்தால் வேலை வாய்ப்பிலும் அரசு இட ஒதுக்கீடு தருகிறது. எந்த பாடப் பிரிவும் கெட்டது கிடையாது. ஆய்வுப் படிப்பிற்கான உயர் படிப்புகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றால் ஊக்கத் தொகையுடன் கல்வியும் கிடைக்கிறது. படிப்பை முடித்தவுடன் வேலை வீடு தேடி வரும் என்று இல்லாமல் நம் படிப்பிற்கான வேலையை தேடிப் போனால் வேலை நிச்சயம் உண்டு” என்றார். இவரும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து புத்தங்களும் பரிசு வழங்கினார்.
விழா முடிவில் துர்கா மகேஷ்வரன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர். பள்ளி வளாகத்தில் மழைத் தண்ணீரால் சகதியாக இருந்ததால் மீனாட்சி மண்டப உரிமையாளர் மாணவர்களுக்கான நிகழ்ச்சிக்காக திருமண மண்டபத்தை இலவசமாக கொடுத்திருந்தார். இதேபோல மாவட்டம் முழுவதும் மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.