கரூர் மாநகராட்சியில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் நூற்றுக் கணக்கான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் வெண்ணைமலை பசுபதிபாளையத்தை சார்ந்த தம்பிராஜ், கெளசிகா தம்பதியினரின் மகள் 12ம் வகுப்பு கணினி அறிவியல் பாடப்பிரிவில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு பள்ளியின் முதல் தளத்திலிருந்து குதித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அருகில் இருந்த ஆசிரியைகள் மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் மாடியில் இருந்து வேப்பம் மரம் கிளைகளுக்கு இடையே குதித்ததால் தலை மற்றும் கால்களில் வலி இருப்பதாக சொல்லப்படுகிறது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கரூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.