
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மஹாராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (CFI), இந்திய மாணவர் சங்கம்(SFI) ஆகிய மாணவர் இயக்கங்களிடையே புதிய மாணவர்களை வரவேற்பதற்காக சுவர் விளம்பரம் எழுதுவதில் ஏற்பட்ட மோதலில் இரண்டாமாண்டு இளங்கலை அறிவியல் பயிலும் மாணவர் அபிமன்யு ( வயது 20) கொடூரமாக கத்தியால் குத்தப் பட்டு கொல்லப் பட்டுள்ளார். அர்ஜூன் என்ற மற்றொரு மாணவன் கத்தியால் குத்தப் பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலைச் செய்யப்பட்ட அபிமன்யு பழங்குடி வகுப்பை சேர்ந்த தமிழ் விவசாய கூலி தொழிலாளியின் மகனாவார்.
இடதுசாரி மற்றும் சிறுபான்மை அமைப்புகள் நாட்டளவில் புரிந்துணர்வுடன் செயல்பட்டு வரும் நிலையில் அந்த புரிந்துணர்வு மேலும் வலுவடைய வேண்டிய அவசியம் எழுந்துள்ள இன்றைய சூழலில் எஸ்எப்ஐ தோழர் சிஎப்ஐயை சேர்ந்தவர்களால் கொலைச் செய்யப்பட்டிருப்பது எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
கொலையில் முடிந்துள்ள மாணவர் இயக்கங்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் மிகுந்த கவலையளிக்க கூடியதும் வன்மையாக கண்டிக்க தக்கதுமாகும். சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி விடுதியில் மாணவர்கள் அறையில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றபட்ட போதே காவல்துறையும்,கல்லூரி நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இது போன்ற கொடூர சம்பவம் நடைபெற்றிருக்காது. இந்த மோதல் தொடர்பாக கேம்பஸ் பிரண்ட் அமைப்பை சார்ந்த இரண்டு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ளது.
கேரளாவில் மாணவர் இயக்கங்கள் பள்ளி,கல்லூரி வளாகங்களில் வலிமையாக செயல்பட்டு வந்தாலும் இது போன்ற வன்முறைகள் விரும்பதக்கதல்ல. ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டிய எதிர்கால இந்தியாவின் சிற்பிகள் அரிவாளை சுற்றுவது வெட்ககரமானது. மேலும் இக்கொலையை மதரீதியாக சித்தரிப்பது கவலையளிக்க கூடியது.
கேரள அரசு பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடும், காயமடைந்த மாணவனுக்கு தகுந்த சிகிச்சையும் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கொலையில் தொடர்புடைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு கல்லூரி வளாகங்களில் மாணவர் மோதலை தடுக்க மாணவர்,ஆசிரியர்கள் அடங்கிய கூட்டுக் குழுக்களை உருவாக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.