மாணவி கைது விவகாரம்: ஒரு வாரத்தில் பதிலளிக்க காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என சேலம் மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டறிக்கை கொடுத்தாக மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே குண்டர் சட்டம் போடப்பட்டதால் மாணவி வளர்மதி பல்கலைக்கழகத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வளர்மதி மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்யக் கோரி, அவரது தந்தை மாதையன் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு வளர்மதி உரிய அனுமதி பெற்றே போராடியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசியல் காரணங்களுக்காக தனது மகள் பழி வாங்கப்படுவதாகவும், குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாணவி கைதுசெய்யப்பட்டது குறித்து ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க சேலம் மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளனர்.