கொரோனா ஊரடங்கு காலத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்கள் பணிநீட்டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சேலத்தில் இப்போராட்டம் மூன்று தினங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. பிறகு இப்போராட்டத்தில் பங்கேற்ற சிலர் சென்னைக்கு சென்று தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளுக்குப் படையெடுக்கத் தொடங்கினர். திடீரென்று பெருகிய கொரோனா நோயாளிகள் ஒருபுறம் இருக்க, ஏற்கனவே பணியாற்றி வரும் அரசு செவிலியர்கள், மருத்துவர்கள் பலரும் கொரோனாவில் சிக்கி விடுப்பில் சென்றனர்.
இதையடுத்து, அப்போதிருந்த அதிமுக அரசு தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக ஃபேஸ் 1, ஃபேஸ் 2 என இரண்டு கட்டங்களாக 3200 செவிலியர்களை அவசர அவசரமாக நியமித்தது. இவர்களுக்கு மாதம் 14 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆறு மாத இடைவெளியில் பணிநீட்டிப்பு உத்தரவு பெற்ற இவர்கள், இரண்டரை ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் 30 ஆம் தேதியுடன் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து செவிலியர்களையும் டிஸ்மிஸ் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் திடீர் உத்தரவால் அதிர்ச்சி அடைந்த தற்காலிக செவிலியர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஜனவரி 1 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த செவ்வாயன்று (ஜன. 30) கண்களில் கருப்புப்பட்டை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம், ராமநாதபுரம், சென்னை, தூத்துக்குடி, நெல்லை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட செவிலியர்கள் தரப்பில் தஸ் நேவிஸ், முத்துலட்சுமி, பாலசந்திரன், வில்வ வினிதா ஆகியோரிடம் பேசினோம். “கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, முந்தைய அதிமுக ஆட்சியின்போது 2020 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டு கட்டங்களாக சுமார் 3200 செவிலியர்களை தற்காலிகமாக நியமித்தனர்.
மாதம் 14 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கி வந்தனர். எம்.ஆர்.பி. போட்டித்தேர்வில் வெற்றி பெற்று, இனசுழற்சி அடிப்படையில் நியமிக்கப்பட்டோம். ஆனால், திமுக ஆட்சி அமைந்த பிறகு, கொரோனா காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களில் 800 பேர் இனசுழற்சி அடிப்படையில் நியமிக்கப்படவில்லை எனக்கூறி, அவர்களை பணியில் இருந்து நீக்கி விட்டது. இனசுழற்சி, இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாமல் நியமித்தது அரசின் தவறு. அதில் இரண்டு அரசுகளும் எங்களை ஏன் பலிகடாவாக்க வேண்டும்? மேலும், பணிநீக்கம் செய்யப்பட்ட 800 பேரை தவிர, மற்ற 2472 பேரும் முறையான இனசுழற்சி, தகுதி அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டு இருக்கிறோம். இதை, இப்போதுள்ள அரசு சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் எங்களுக்கு வழங்கிய பணி நியமன ஆணையிலேயே இனசுழற்சி, தேர்வு அடிப்படையில் நியமனம் என்றுதான் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் திடீரென்று டிசம்பர் 30 ஆம் தேதியுடன் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட 2472 தற்காலிக செவிலியர்களையும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். அடுத்து நாங்கள் எங்கே போவது என்று தெரியாமல் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில் தவித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரவில்லை. அதேநேரம், எங்களுக்கு பணிநீட்டிப்பு வழங்க வேண்டும். மேலும், கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்களை தொகுப்பு ஊதியத்திற்கு மாற்ற வேண்டும். காலிப்பணியிடங்கள் உருவாகும்போது, எங்களுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிரந்தரம் செய்ய வேண்டும்” என்றார்கள் பாதிக்கப்பட்ட செவிலியர்கள்.
செவிலியர் படிப்பை முடித்துவிட்டு பலர் முன்னணி தனியார் மருத்துவமனைகளிலும், சிலர் வேறு துறைகளிலும் மாதம் 40 - 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஊதியம் பெற்று வந்துள்ளனர். என்றாவது ஒருநாள் அரசுப்பணி நிரந்தரமாகி விடும் என்ற கனவில் பலர் தாங்கள் வாங்கி வந்த நல்ல ஊதியத்தை விட்டுவிட்டு, 14000 ரூபாய் தொகுப்பூதியத்திற்கு தற்காலிக பணியில் சேர்ந்துள்ளதும் நமது விசாரணையில் தெரியவந்தது.
இது ஒருபுறம் இருக்க, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 200 தற்காலிக செவிலியர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கவில்லை என்கிறார்கள். இங்கு மட்டுமின்றி, மேட்டூர் (சேலம்), தஞ்சாவூர், கரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் 2 மாதம் முதல் 6 மாதம் வரை ஊதியம் கொடுக்கப்படாமல் இழுத்தடித்து வருவதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக விளக்கம் பெற நாம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை கடந்த மூன்றாம் தேதி செல்போனில் தொடர்பு கொண்டோம். நம்மிடம் பேசிய அவரது பி.ஏ., “அமைச்சர் வெளியூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருக்கிறார். இப்போதைக்கு அவரிடம் பேச முடியாது. இந்த பிரச்சனை தொடர்பாக அமைச்சர் ஏற்கனவே ஊடகங்களிடம் விளக்கம் கொடுத்து விட்டார். இது தொடர்பாக செவிலியர்கள் தரப்பு பிரதிநிதிகளை அமைச்சரிடம் நேரில் பேசச்சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.
இது ஒருபுறம் இருக்க, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் ஆதரவு கேட்டு, திங்களன்று (ஜன. 2) சேலத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். பாஜக, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், இடதுசாரிகள், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் போராட்டக் களத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் ஒப்பந்த செவிலியர்கள் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பணி நீட்டிப்பு செய்வது தொடர்பாக பேசப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பணி நீட்டிக்கும் முடிவை ஒப்பந்த செவிலியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். மேலும், அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடரும் என ஒப்பந்த செவிலியர்கள் அறிவித்துள்ளனர்.