சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக் கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் புதன்கிழமை மாலை கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாகச் சென்று உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தொகுப்பூதியர் மற்றும் தினக்கூலி ஊழியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை மற்றும் பணப் பயன்களை வழங்கிட வேண்டும். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக் கூட்டமைப்பினர் பல்கலைக்கழகத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் கருப்பு பேட்ச் அணிந்து இரண்டு நாள் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மனிதச் சங்கிலி போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் புதன்கிழமை மாலை பல்கலைக்கழக தலைமை அலுவலகம் முதல் ராஜேந்திரன் சிலை வரை கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பேரணி நடைபெற்றது. இதில் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு, கண்டனப் பதாகையைக் கையில் ஏந்தி வந்தனர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராமதாசை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். இதில் ஜாக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவகுருநாதன், இணை ஒருங்கிணைப்பாளர் மனோகரன், மற்றும் ரவி, ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பழனிவேல், பாஸ்கர், ஓய்வூதிய சங்க இளங்கோ உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.